குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர், 13/12/2021 அன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு சில கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு தமிழ் மக்களுக்கு மேலும் ஆபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் பொழுது வேதனையை தருகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிய நாடுகளின் அழுத்தத்தை பிரயோகிக்க சொல்லி கோருவது முட்டாள்த்தனமான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் உள்ளுர் அரசியல்வாதிகளையும் பெரும்பான்மை இன கடும் போக்காளர்களையும் கோபமடைய செய்யும் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள புரிந்துணர்வை சிதைக்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும் எனத் தெரிவித்துள்ள அவர், ‘இலங்கை ஓர் இறைமையுள்ள நாடாகும். எந்த ஒரு நாடும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிடுவதை இலங்கையும் விரும்புவதில்லை. குறிப்பிட்ட நாடுகளும் இந்த விடயத்தில் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கும். இந்த விடயம் அனைத்து தரப்பினருக்கும் தெரிந்திருந்தும் மக்களை முட்டாள்களாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கவிடயம் ஆகும்’ எனவும் கூறியுள்ளார்.

எந்த ஒரு காலகட்டத்திலும் சமஸ்டி என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அனைத்து தரப்பினரும் கூறிய பின்பும் ‘சமஸ்டியை பெற்றே தீருவோம்’ என்று அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வையே முன்வைத்து வருகின்றது. இதற்கு மேலாக இந்தியாவும் எமக்கு எதையும் பெற்றுத்தரப் போவதில்லை. பெருமளவு சிங்கள மக்களும் அரசியல் தரப்பினரும் ஒரு காலத்தில் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்று இலங்கையிடம் சமரசமாக பேசிப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதே சாலச் சிறந்ததாகும்’ எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.