திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கிகள் மற்றும் 33000 ஏக்கர் நிலத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கிகள் மற்றும் 33000 ஏக்கர் காணியை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் எந்த மனநிலையில் செயற்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும். அரசாங்கத்தில் முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்போர் அமெரிக்க மனநிலையில் இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் கனிய எண்ணெய் சட்டத்தை திருத்தி, அமைச்சருக்கு தேவையான வகையில் தனியார் நிறுவனங்கள் எரிபொருளை விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. அதனை முதலீடு என்று கூறினார்கள். அதனை முதலீடு என்று கருத விரும்பாத தற்போதைய அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதனை தவிர கெரவலப்பிட்டிய எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலைய திட்டத்தில் 40 வீத பங்கை அமெரிக்காவுக்கு வழங்க தீர்மானித்தனர். இதனடிப்படையில் கையெழுத்திட போவதில்லை எனக் கூறி அரசாங்கம் எம்.சீ.சீ. உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

நாட்டின் வளங்களை விற்பனை செய்ய மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கவில்லை.

எம்.சீ.சீ. உடன்படிக்கை ஊடாக உருவாக்கப்பட்ட அமெரிக்க வழிப்பாதையை திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக கெரவலப்பிட்டி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்கள் வரை செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்குகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கும் கொழும்பு துறைமுகம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்ட பின், நாட்டு மக்கள் ஒழிந்துக்கொள்ள பதுங்குகுழியை அமைக்க வேண்டியதை மாத்திரமே செய்ய நேரிடும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.