அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

மேதின நிகழ்வுகள் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காணலாம் என நம்பிக்கைகொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஏப்ரல் 19ம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகம் ,.அரசியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை கொண்டிருப்பது வழமை என தெரிவித்துள்ள பிரதமர் வேறுபட்ட அரசியல் கொள்கைகள் கருத்துக்களால் இந்த நிலை காணப்படும் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் காணப்படும் அரசியல்கூட்டணிகளை கருத்தில்கொள்ளும்போது இது புதிய விடயமல்ல என தெரிவித்துள்ள பிரதமர் இது எங்கள் கூட்டணியில் உள்கட்சி ஜனநாயகம் காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் பல விவகாரங்கள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ள பிரதமர் கூட்டணியின் ஐக்கியத்திற்கு ஆபத்து என்பது இதன் அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.