இனப்பிரச்சினைக்கான தீர்வினை உள்ளடங்கிய புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டார்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பேச்சுவார்த்தைக்கான ஒரு சூழ்நிலை எழ வேண்டும். அரசாங்கம் அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அரசாங்கம் அதற்குத் தகுந்ததாக இருந்து அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆயத்தமாக இருந்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்களும் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதற்கான பிரேரணைகளும் ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் அதி முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபையிலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையிலும் எமக்கு ஒரு புதிய உத்வேகம் இருக்கின்றது.

எமது நாட்டின் இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியிலும் அடித்தளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் தயாராக இருக்கின்றோம்.

நாம் எதிர்பார்த்த முழுவதும் அப்படியே இங்கே கிடைக்காது விட்டாலும் இந்த மனித உரிமைப் பேரவையின் முன்னேற்றங்கள் தொடர்பில் நாங்கள் ஆர்வம் கொண்டு பொறுத்திருந்து அந்த நடைமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட வேண்டும்.

மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம்.

ஆளுங்கட்சிகள் வடக்கு, கிழக்கைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் நாங்களும் எவ்வளவு தூரத்திற்கு மிகப் பெரிய அளிவில் ஒன்றுபட்டு செயற்பட முடியும், தேர்தல் வெற்றியைப் பெற முடியும் என்பது பற்றி ஆராய்வோம்.” என்றுள்ளார்.