“அரசிலிருந்து வெளியேறி, மாற்று அரசியல் கூட்டணியை அமைக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியசெயற்குழு எடுக்கவில்லை.”  – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் மாற்று அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும் என கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பலரும், பலவிதமான கருத்துகளை முன்வைத்திருந்தாலும் கட்சியின் மத்திய செயற்குழுவில் அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஒருவரால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவலானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தோம். எனவே, அவருக்கான ஆதரவு தொடரும். அதேபோல கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையும் கீழ்மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்படும். அரசியிலிருந்து வெளியேறும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.” -என்றார்.