ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுகளுக்கும் ஒரு கடினமான பணி உள்ளது.

அதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சவாலான நிலைமையிலிருந்து மீள்வதற்கு அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து, சிறந்த முறையில் கடமையாற்றுவோம்.

நமது குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம். ஆகவே அதை ஆழமாக புரிந்துகொண்டு செயற்பட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

நாங்கள் எங்கள் விருப்பத்தின் பேரில் சத்தியம் செய்கிறோம்.  தியாகம் மற்றும் தேசத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் நிச்சயம் சேவையாற்றுவோம்.

நாங்கள் மக்களுக்காக செய்யக்கூடிய வேலைகளில் உறுதியாக இருக்கிறோம். பதவிகளுக்காக சேவை செய்யவில்லை.

இதேவேளை ஆசிரியர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக  தீர்வு முன்வைக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.