ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் காபூலை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தலிபான்களுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

அதேசமயம், காபூலில் தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.

‘ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் நாடுகடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்’ என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.