ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் தலிபான் அமைப்பின் உயர் தலைவர் என கூறப்படும் முல்லா ஹெப்துல்லா அகுந்த் (Mullah Haibatullah Akhundzada ), நேற்று காந்தஹார் மாகாணத்தில் யாரும் அறியாத ஒரு இடத்தில் சந்திப்பை நடத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.

தலிபான் தலைவர் இதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியாமலிருந்த நிலையில், ஆப்கானிஸ்தானிற்கு அவர் வந்துள்ளமை இதன்மூலம் உறுதியாகியுள்ளது. அவர் கந்தஹார் மாகாணத்தின் பழங்குடித் தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தலிபான் அமைப்பின் உயர் தலைவர் முல்லா ஹெப்துல்லா அகுந்தின் ஒரேயொரு புகைப்படம் மட்டுமே உலகத்தின் பார்வையில் பட்டுள்ளது.

அது தவிர அவர் தொடர்பில் வேறெந்த தகவலும் யாருக்கும் தெரியாது. அவ்வளவு இரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஆப்கானிஸ்தான் தலைநகருக்கு வந்து மற்ற தலிபான் அதிகாரிகள் மற்றும் பிற ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன், தலிபானின் இணை நிறுவனர் மற்றும் தோஹாவில் உள்ள தலிபானின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா அப்துல்கனி பரதர் கந்தஹார் மாகாணத்திற்கு வந்திறங்கியிருந்தார். சில சந்திப்புக்களிற்காக அவர் தூதுக்குழுவுடன் காபூலுக்கு வந்தார்.

இந்நிலையில் தலிபான்களின் ஆட்சி கந்தஹார் மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டதை குறியீடாக காண்பிக்கவே, கந்தஹாரில் சந்திப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் வரவிருக்கும் அரசாங்கம் குறித்த பேச்சுவார்த்தைகள் உயர் தலைவர் காபூலுக்கு வந்த பிறகு துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தகவல் மற்றும் கலாச்சாரத்துறை பதில் அமைச்சரும், தலிபானின் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தங்கள் அமைச்சரவை உருவாகும் என கூறியிருந்தார். தலிபான்கள் வரவிருக்கும் அரசாங்கத்தின் வடிவம் பற்றி எதுவும் சொல்லவில்லை. எனினும் அரசாங்கம் மத அறிஞர்களால் (உலமாக்கள்) வழிநடத்தப்படும் என தலிபான்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.