பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டாபரம்பரை’ படத்தை அவருக்கு மனைவியாக மாரியம்மா என்ற வேடத்தில் நடித்தவர் துஷாரா விஜயன்.

அந்தப் படத்தில் அவரது நடிப்பும், முதலிரவு அறையில் அவர் போட்ட குத்தாட்டமும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தமிழ்ப் படத்தில் அவர் நடித்துள்ளார். கேரளப் பெண்ணான துஷாரா, தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்தவர். நன்றாக தமிழ்பேசும் திறமை கொண்டவர். ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு முன்னரே ‘அன்புள்ள கிள்ளி’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துவிட்டாராம். அந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. இதற்கிடையில், வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜுன்தாஸ் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனது அனுபவம் குறித்து அவர் கூறும்போது:

“திண்டுக்கல் அருகேயுள்ள கன்னியாபுரம்தான் எனது சொந்த ஊர். எங்க கிராமத்தில் மக்கள் எப்படி இயல்பாக இருப்பார்களோ, அதேமாதிரி எனக்கு ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஒரு வேடம் அமைந்தது. ‘போதையேறி புத்தி மாறி’ திரைப்படம்தான் என் முதல் படம். சிறப்பு தோற்றம் போல அதில் எனக்கு சிறிய வேடம்தான். அதற்கு முன்பு ‘சர்க்கார்’ திரைப்படத்தில் ஒரு காபி ஷாப் காட்சியில் நடித்திருப்பேன். அது பெரிதாக யாருக்குமே தெரியாது. இப்போது ‘சார்பட்டா பரம்பரை’ எனக்கு அளித்துள்ள உயரம் மிகப் பெரிய இடம். 6-ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்தே எனக்கு நடிப்பின் மீது தனி பிரியம் இருந்தது. அது இப்போது நிறைவேறியதில் சந்தோஷம். இன்னும் விதவிதமான வேடங்களில் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். அந்த வரிசையில் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதை முக்கியமாகப் கருதுகிறேன். ‘சார்பட்டா’ மாரியம்மாவுக்கு நேர் எதிரான வேடம் அது. இப்படத்தில் ரொம்ப அமைதியான பெண்ணாக நடித்து வருகிறேன்!” என்கிறார்.