உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் குறித்து புனித பாப்பரசரை சந்திக்க இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் எடுத்துவரும் முயற்சிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மையை மூடிமறைக்கவும் சர்வதேசத்தின் கவனத்தை திசைத்திருப்பவுமே இந்த முயற்சியை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலியின் பொலொன்ஞா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் புனித பாப்பரசரை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பல விடயங்கள் பற்றிய விசாரணையின் முன்னேற்றம் பற்றி விளக்கப்படுத்தவுள்ளார்கள் என்று கூறப்படுகின்றது. இந்தப் பயணத்திற்கு எமது நாட்டு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி செல்வதன் நோக்கம் என்ன? இந்த முயற்சியை நான் முற்றாக கண்டிக்கின்றேன் என்றும் உண்மையை மூடிமறைக்கவே அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் பாப்பரசர் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு பொய்யுரைக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். உண்மையை மூடிமறைக்கின்ற மற்றுமொரு துரும்புவாக அரசாங்கம் இதனை கையாள்கின்றது. மக்களுக்காக முன்நின்று நாங்கள் நீதியையே கேட்டோம்.

இரண்டு வருடங்களாக நீதியைக் கேட்டு நிற்கின்றோம். அரசாங்கமே முதலில் சர்வதேசத்தை நாடுகின்றது. ஆகவே அதற்கு முன்னர் நாங்கள் எமது நிலைப்பாட்டினை சர்வதேசத்திடம் கூறிவிட்டோம். இந்த அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மூடிமறைப்பதுடன், மக்களுக்குப் நீதியை பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கிறது என்பதையும் தெரிவிக்கின்றோம்.

ஜனாதிபதிக்கு அனைத்து விடயத்தையும் தெரிவித்து ஜுலை மாதத்தில் கடிதமொன்றை அனுப்பய போதிலும் பிரச்சினையை மூடிமறைக்கின்ற பதிலைத்தான் அவர் வழங்கினார்.

எனவே அரசாங்கம் சர்வதேசத்திற்கு செல்வதாயின் நானும் சர்வதேசத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக செல்வேன் என்றும் பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகை இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.