காலை உணவை 8 மணிக்குள்ளும் மதிய உணவை 1 மணிக்குள்ளும், இரவு உணவை 7 மணிக்குள்ளும் உட்கொள்வது நல்லது என்று அக்குபஞ்சர் உள்ளிட்ட மாற்று மருத்துவங்கள் பரிந்துரைக்கின்றன. இரவில் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளின் செயல் திறன் பாதிக்கப்படும் என்று சில மருத்துவ முறைகள் எச்சரிக்கின்றன.

இரவில் மிகத் தாமதமாக உணவு உட்கொள்வது நினைவு திறன் உள்ளிட்ட மூளையின் செயல்பாட்டைப் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய செயல்பாடுகள் சர்கார்டியன் ரிதத்தை பாதிக்கும் என்கின்றனர்.

இரவில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இப்படி அதிகரிக்கும் உடல் எடையைக் குறைப்பது என்பது சற்று கடினமானதாக இருக்கும்.

சிலருக்கு உணவின் மீது அதீத காதல் இருக்கும். இதனால் சாப்பிட்ட பிறகும் ஏதாவது கொறித்துக்கொண்டே இருப்பார்கள். இரவில் இவர்களுக்கு அதிக பசி இருக்கும். இதை நைட் ஈட்டிங் சிண்ட்ரோம் என்று கூறுவார்கள். அப்படி பாதிப்பு இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று உணவைக் கட்டுப்படுத்துவது நல்லது.

உணவு காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் செரிமானம் செய்யப்படும் வகையில் இரைப்பையில் அமிலங்கள், நொதிகள் சுரக்கின்றன. சரியான நேரத்துக்கு சாப்பிடாதது அமிலங்கள் அதிகரித்து நெஞ்சு எரிச்சல் பிரச்னையை ஏற்படுத்திவிடலாம்.

இரவு 7 மணிக்குப் பிறகு சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, இரவு உணவை 7 மணிக்கு முன்பாக முடித்துவிடுவது நல்லது. வேலை, அலுவலக பணி என இருந்தால் குறைந்த பட்சம் 8 மணிக்குள்ளாவது சாப்பிட்டு முடிப்பது நல்லது.

குறைந்தபட்சம் இரவு தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். இரவில், காரமான, மசாலா உணவைத் தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானம் ஆகும் உணவைச் சாப்பிட வேண்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் அருந்தலாம். பசிக்கிறது என்றால் வாழைப்பழம் அல்லது வேறு பழங்களைச் சாப்பிடலாம். பிஸ்கட், சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களை இரவில் சாப்பிட வேண்டாம்!