ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்த தாக்குதல் தொடர்பான பிரச்சினையை தேசிய மட்டத்தில் தீர்க்க முடியாது என்றால், அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் முழுமையான உரிமை கத்தோலிக்க மக்களுக்கு இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதனை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

“தமது பிரச்சினை குறித்து தமக்கு திருப்தியடைய முடியாது என்றால், நீதிமன்றத்தின் உயர்ந்த இடத்திற்கு செல்ல உரிமை இருக்க வேண்டும்.

இலங்கை உலகில் தனியாக வாழும் நாடு அல்ல. உலக அமைப்புகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்ட நாடு. நாட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறான இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம். சர்வதேசத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் அல்ல. இதற்கு முன்னரும் நாட்டின் பல பிரச்சினைகள் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

88-89 ஆண்டுகளில் காணப்பட்ட பிரச்சினைகள் மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளின் கொடூரமான சம்பவங்கள் பற்றியும் சர்வதேசத்திற்கு விடயங்களை முன்வைத்தமை இதற்கு உதாரணமாகும்.

இதனால், எமக்கு தொடர்ந்தும் சர்வதேசத்திடம் துன்ப, துயரங்களை கூறிய வரலாறு உள்ளது. இதன் காரணமாக இந்த சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மக்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு பௌத்தர்கள் இணங்கி, அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுடன் பௌத்த – கத்தோலிக்க மக்களின் ஒற்றுமை வலுவானது” எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது சம்பந்தமாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே தேரர் இதனை கூறியுள்ளார்.