நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதில் முன்னாள் வீரர்களான உப்புல் தரங்க, தம்மிக்க பிரசாத் இருவருடன் டில்ஷான் முனவீர, சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ண,  ஓஷத பெர்னாண்டோ, சந்துன் வீரக்கொடி, சஹான் ஆராச்சிகே  உள்ளிட்ட வீரர்கள்  விளையாடவுள்ளனர்.

இவர்களை தவிர தினேஷ் சந்திமால் இப்போட்டித் தொடரின் கிளேடியேட்டர்ஸ்  அணிக்காக ஒப்பந்தமாகியிருந்த போதிலும், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றதன் காரணமாக இப்போட்டித் தொடரிலிருந்து விலகினார்.

இலங்கை வீரர்கள்  8 பேரை விடவும் 10 நாடுகளிலிருந்து 17 வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளமை மேலதிக சிறப்பம்சமாகும்.

நான்காவது  தடவையாக நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக்கின் நடப்பு சம்பியனாக லலித்பூர் பேற்றியட்ஸ் திகழ்கிறது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரானது எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.