மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் காரைக்குடியில் முகாமிட்டு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். கமலுக்கு வில்லனாக ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் ஆகிய மூன்று பேர் நடித்து வருகின்றனர். இளம் காதல் ஜோடி ஒன்றும் படத்தில் உண்டு. இளம் காதலராக ஜெயராமின் மகன் காளிதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது காதலியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

தவிர, இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடி உண்டா? எனில், கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது பற்றி படக்குழுவினர் எந்தத் தகவலையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை. அதேவேளை, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிக்பாஸ் சீசன் 4-இல் பங்கேற்ற ஷிவானி நாராயணன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும், காரைக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவரும் கலந்து கொண்டுள்ளார் என்றும் நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன. ஷிவானி தன்னுடைய சமூக வலைதளப் படங்கள் மற்றும் மோசமான நடன அசைவுகளுக்காக தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.