தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள ஒரு தீவினை நிர்மாணிப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இதற்காக சுமார் நான்கரை கியூப் மணல் இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வரிப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாணக்கியன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியை மாத்திரமல்லாது,  நாடாளுமன்ற உறுப்புமையை துறக்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.