கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது. அந்தவகையில், கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

-என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

மேலும் பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. அவை நாட்டின் 15 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 60 ஆயிரம் தடுப்பூசிகள் குருநாகல் மாவட்டத்துக்கும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் காலி மாவட்டத்துக்கும், 80 ஆயிரம் தடுப்பூசிகள் மாத்தறை மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கும் தலா 80 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு தலா 75 ஆயிரம் தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்துக்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன – என்றார்.