புனித ரமழான் மாதம் தொடங்கி இருப்பதை அடுத்து சவூதி அரேபியா நாட்டில் மெக்காவில் உள்ள புனித தளத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான கடைப்பிடிக்கும் ரமழான் மாதம் பிறை தோன்றும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டதை அடுத்து இந்த ஆண்டுக்கான ரமழான் மாதம் தொடங்கி இருப்பதாக இஸ்லாமிய மத தலைவர்கள் நேற்று அறிவித்துள்ளனர். இதையடுத்து மெக்காவில் உள்ள பெரிய மசூதி, இறை தூதர் மசூதி ஆகியவற்றில் மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரமழான் மாதத்தில் மெக்காவுக்கு வருகை தருவோர் உரிய அனுமதி இல்லாமல் யாத்திரை மேற்கொண்டால் 10 ஆயிரம் ரியால்  அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் யாத்திரீகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே உம்ரா யாத்திரை மேற்கொள்ளவும் மெக்கா மசூதிக்கு செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.