இலங்கையில் கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பண பரிசை வழங்கும் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகந்ததாச விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன், சர்வதேச தரத்திற்கு அமைய ஒழுங்கு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

நாட்டின் முன்னணி பத்து கால்பந்தாட்ட அணிகள் இந்த சுப்பர் லீக் போட்டியில் பங்கேற்கின்றன. இதில் முதல் போட்டியில் நியூ-யங் அணியும், கலம்பு கு ஊ அணியும் பங்கேற்கவுள்ளன. அதனைத் தொடர்ந்து புளுஸ்டார் அணியும், ரெட்ஸ்டார் அணியும் மோதவுள்ளன.

ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியும். 45 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 35 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.