நிகழ் அய்க்கண்

இந்திய ஒன்றியத்தில், அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலானது, முக்கியமாக சந்தைமயம் – வலதுசாரி அடையாள அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் பி.ஜெ.பி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக்கூட்டணிக்கும், ஜனநாயகம் – மதச்சார்பின்மை மற்றும் மக்கள் நல அரசின் சில அம்சங்களின் வழியாக சந்தைமயத்தை அணுகுகிற மதச்சார்பற்றக் கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக அமைந்துள்ளது.

’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதுபோல், ’ஒருவாக்கு – ஒரு மதிப்பு’ எனும் அடிப்படையில் நடக்கும் தேர்தல் என்பது அனைவருக்கும் ஜனநாயகத்தின் குறிக்கோள்ககளை நிலைநாட்டுவதாக இருக்கவேண்டும். ஆனால் யதார்த்தத்தில்,மக்கள் நல அரசு கால கட்டத்தில் நடந்த தேர்தலுக்கும், தற்போதைய ஜனநாயகத்திற்குப்பிறகான சந்தைமய காலத்தில் நடந்துவரும் தேர்தலுக்கும் நிறைய மாற்றங்களைக்காண முடிகிறது.

தேர்தலை நடத்துகின்ற ஆணையமானது ஆட்சியாளர்களின் தலையீடின்றி சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்வது என்பது அவசியம். அப்போதுதான் தேர்தல் ஜனநாயகத்தையும் அதன் மீதான நம்பகத்தன்மையையும் வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.

மக்கள் நலனில் கொண்டு, ‘வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களித்திடவேண்டும்’ எனும் தேர்தல் ஆணையத்தின் அக்கறையுணர்வினை ஜனநாயகத்தன்மை கொண்டதாக கருதமுடிகிற அதே சமயம், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது – வாக்காளர் பட்டியல் குளறுபடி – எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் நம்பகத்தன்மை – வி.வி.பேட் ஐம்பது சதம் வாக்குப்பதிவு எண்ணிக்கையை சரிபார்ப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் – வாக்காளர்களுக்கு இடையேயான உரையாடல்கள் இன்னும் முடிவுறாமல் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்னொருபக்கம், தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மைகொண்டது எனக்கூறிக்கொண்டாலும், கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை- வேட்பாளர்களின் தேர்தல் செலவு- குற்றப்பின்னனி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது – வாக்காளர்பட்டியலில் குளறுபடி- வேட்பாளர்களின் சொத்து மதிப்பு உயருவது – கட்சிமாறுவது – வாக்குச்சீட்டு முறையை திரும்பக்கொண்டுவருவது – வாக்காளர்களுக்கு கையூட்டு அளிப்பது உள்ளிட்டவற்றில் தேர்தல் ஆணையம் – அரசியல் கட்சிகள் – ஆட்சியாளர்களுக்கிடையேயான முரண்களுக்கு இன்னமும் தீர்வுகாண முடியவில்லை. அதுமட்டுமல்லாது, தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை ஓட்டுப்போட விடாமல் ஆதிக்கச்சக்திகள் தடுப்பது மற்றும் அரசு நிர்வாகத்தினர் ஆட்சியாளர்களுக்குச்சாதகமாக நடந்துகொள்வது குறித்தும் தேர்தல் ஆணையத்தின் மீது எழுந்து நிற்கும் விமர்சனங்களும் பரவலாக இல்லாமல் இல்லை. மேற்கூறியவற்றிலிருந்து பார்க்கும் போது, தேர்தல் ஆணையச்செயல்பாடுகளானது, சந்தைமய – வலதுசாரி அடையாள அரசியலினை எதிர்கொள்ளத்தக்க அளவுக்கு தன்னை இன்னமும் மேம்படுத்திக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.

சந்தைமயமும் – வலதுசாரி அடையாள அரசியலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமின்றி, இவைகளுக்கிடையே அதிகாரம் -பணபலம் -அடையாளம்- உள்ளிட்டவற்றில் ஒத்த தன்மைகளைக் காணமுடிகிறது. இவற்றினை அடைவதற்கும் ,தக்கவைத்துக்கொள்வதற்கும் ’வலிமையானதே வெல்லும்’ என்பதற்கிணங்க வன்முறைகளை ஆயுதமாக கொள்கிறது.

வலதுசாரி அடையாள அரசியலானது பிற இன-மத அடையாளங்களை அழிப்பதற்கு தேர்தலினை ஒருவாய்ப்பாகக்கருதி முனைப்புடன் செயல்படுவதைக் காணமுடிகிறது. இன்னும் குறிப்பிட்டுச்சொன்னால், சந்தைமயத்தையும் – வலதுசாரி அடையாள அரசியலையும் இரு கண்களாகக்கொண்டு சூழ்ச்சிமிகு திறனுடன் செயல்படும் பி.ஜெ.பி யானது, ஒவ்வொரு முறையும் நடைபெறும் சட்டமன்ற – நாடாளுமன்ற தேர்தலினையும் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டு, அதன் மூலமாக “ஒரே நாடு – ஒரே மக்கள் – ஒரே தேர்தல் “ எனும் அடையாள இலக்கினை அடைவதற்கும் இரு வழிகளில் செயல்படுபவர்களாக இருக்கின்றனர். அதாவது, தேர்தலுக்கு முன்பு, பொய்களைக்கட்டவிழ்த்து, மதச்சார்பின்மையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிற காங்கிரஸ் கட்சி : ஜனநாயகத்தை – வர்க்க ஒற்றுமையை பேசுகிற இடதுசாரிகள் : சகோதரத்துவம் பேணும் சிறுபான்மையினர்களை திட்டமிட்டு சிதைக்கின்றனர். அத்துடன், அதிகாரம் – பணபலம் இவற்றின் துணையுடன் பிறகட்சிகளின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிமாறச்செய்து பரபரப்பாக்கிவிடுகின்றனர் ; சமூக ஊடகங்களின் வழியாக மக்களை பிளவு படுத்தவும், மதவெறியூட்டவும் செய்து, அதன்மூலம் பெரும்பான்மைச்சமூக மக்களை ஒருங்கிணைத்து வெற்றிபெறுவதுதான் இவர்களது தந்திரம். அதுமட்டுமின்றி, தனக்கு இணக்கமாக உள்ள அரசியல் கட்சிகள்,சாதி -மத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை பல்வேறு அணிகளாக பிரிந்துநின்று தேர்தலில் போட்டியிடச்செய்கின்றனர். இவ்வாறு பிரிந்து நின்று தேர்தலைச்சந்திக்கும்போது, வாக்குகளைப்பிரித்து, பொது எதிரியை வீழ்த்திடமுடியும் என்பதும் இவர்களது கணக்கு.

தேர்தலுக்கு பின்பு, தங்களது அதிகாரத்தை மேலும் அழுத்தமாக நிலைநிறுத்திக்கொள்ள பிற தேசிய – மாநில அரசியல் கட்சி மக்கள் பிரதிநிதிகளை அதிகாரம் – பணபலத்தினால் கட்சி மாறச்செய்து மாநிலத்தின் ஆட்சியைக்கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர். கடந்த 12.03.2021 செய்திப்பத்திரிக்கையில் வெளிவந்துள்ள ஒரு செய்தியின்படி, கடந்த 2016-2020 காலகட்டத்தில் மட்டும் நாடு முழுக்க 443 சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்கள் வலதுசாரி அடையாள அரசியலை முன்னெடுக்கின்ற பி.ஜெ.பி யில் சேர்ந்து பல மாநிலங்களின் ஆட்சிமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கின்றனர். இவ்வாறு கட்சி மாறியதன் காரணமாக பதவியிழந்த அவர்கள், இரண்டாவது முறையாக வாய்ப்பளிக்கப்பட்டு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும்போது அவர்களினது சொத்தின் மதிப்பானது முன்பிருந்ததைவிட கிட்டத்தட்ட 39 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என ”ஜனநாயகச்சீர்திருத்த அமைப்பு” நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சந்தைமய தாக்கத்தின் காரணமாக, சமூக – பொருளாதார அளவில் கடும் ஏற்றத்தாழ்வினை சமாளிக்க முடியாமல் எளியமக்கள் திணறிவருகின்றனர். இச்சூழலில், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பதாகக்கூறிக்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துமதிப்பானது ,கார்ப்பரேட் நிறுவனங்களைப்போன்று ஐந்தாண்டு இடைவெளியில் பன்மடங்கு உயர்ந்துகொண்டே போவது தேச நலனுக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்கும் அழகைச்சேர்க்கப்போவதில்லை.

மக்கள் நல அரசு காலத்துத்தேர்தலானது, பொதுத்தன்மையை- ஒற்றுமையை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தியது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரமோ, மக்கள் நலன் – ஜனநாயகம் -ஊழலற்ற நல்லாட்சி – மக்கள் உரிமை – நல்லிணக்கம் என்பதாக இருந்தது. நாட்டினது குடிமகனுக்கும் சமவாய்ப்பு – சம உரிமையை உறுதி செய்வதாக இருந்தது. இதன்மூலம் குடிமகனானவர் தேர்தல் செயல்பாடுகளில் சுதந்திரமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்பவராக இருந்தார். தேர்தல் அறிக்கைககளோ அரசியல் கட்சிகளின் கொள்கை அல்லது திட்டமாக மக்களின் முன் வைக்கப்பட்டன.

ஜனநாயகத்திற்குப்பிறகான சந்தைமயகாலத்து தேர்தலானது ,தனியாருக்கும் – அடையாளத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. உரையாடலின் தன்மையே பெரும்பான்மையினர் # பிறர் (சிறுபான்மை – இடம்பெயர்வோர் ) என மாறி நிற்கிறது. அதுமட்டுமல்லாது, சந்தைமயக்காலத்தில் குடிமகனானவர் நுகர்வோராக ஆக்கப்படுவதுபோல், வாக்காளர்கள் வெறும் பார்வையாளராக இருத்தி வைக்கப்படுகிறார். சமூகநீதிக்கொள்கையை பற்றி நிற்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கை தவிர, வலது சாரி அடையாள அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பலவும் பிளவு வாதத்திற்கு துணைபோவதாகவும், வெற்று வாக்குறுதிகளாலும் நிரம்பி வழிகின்றன.

இதற்கு முன்பான ஜனநாயகக்காலத்தில், அரசியல் தலைவர்கள் மக்களை நேரடியாகச்சந்திப்பதற்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர். தியாகங்கள் போற்றப்பட்டன. தற்போதைய கார்ப்பரேட் காலத்தில் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் தகவல் தொழில் நுட்ப உதவியுடன் தகவல் தொடர்பின் வழியாக மக்களைச்சந்திப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். வலதுசாரி அடையாள அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் யாவுமே ஒருபக்கம், வாக்காளர்களை கவர்வதற்கென திரைப்படக்காட்சிகளில் வரும் கதாநாயகர்களை ஒத்தும், கண்கவர் மிகுந்தும், சாகஸங்கள் நிறைந்தும் ஒளிவெள்ளத்தில் மிளிர்வதாகவும் இருக்கின்றன.மறுபக்கம் சினிமாக்காரர்களால் நிரம்பிவழிகிறது.

தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு பஞ்சமிருப்பதில்லை. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணைய விதிமுறைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இதே போல, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது தேர்தல் சமயத்தில் எந்த அளவுக்கு பெருக்கமடைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு வலதுசாரி அடையாள அரசியல் கட்சிகள் யாவும் பலனடைகின்றன. பலவாறான கருத்துக்கள் பல்முனைகளின் வழியாக குறுக்கும் நெடுக்குமாக பரவலாகிடும்போது, எதிரும் புதிருமான கருத்துக்களும் சேர்த்து பயன்படுத்துவோரால் உள்வாங்கப்படுகின்றன. மனித மூளையானது பல்வகைத்தகவல்களின்அழுத்தம் காரணமாக நல்லது # கெட்டது என பகுத்தறிவதில் திணறிடுகிறது. இதன்காரணமாக பயன்படுத்துவோர் அறியாமை எனும் இருளில் மூழ்குவது மட்டுமின்றி, நாளடைவில் விமர்சனச்சிந்தனையையும் இழந்துவிடுகின்றனர். இப்படியான மனநிலையுடையவர்களை தனக்கு எதிரானவர்கள் மீது சதிநோக்குடன் பழிசுமத்துவதற்கும், தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சீராக்கி நீர்த்துப்போகச்செய்வதற்கும் வலதுசாரி அடையாள அரசியல் வாதிகள் கச்சிதமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இயற்கையையும் மனிதனையும் சந்தைமயத்திற்கு உட்படுத்துவதுதான் நவதாராளமயம். அதுபோல, வலதுசாரி அடையாள அரசியலும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கு ; ஆட்சிமாற்றமெனில் – காங்கிரஸ் ; மதக்கலவரமெனில் – இஸ்லாம் ; ஆணவக்கொலை மற்றும் வன்புணர்வு எனில் – தலித் என்கிறவாறு பயன்படுத்திக்கொள்கிறது.

அப்புறம் ,மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் தனது அடையாளத்தை மேலும் மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்கிறது. வலதுசாரி அடையாள அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலுக்கு முன்பு, மக்கள் நலனைப்பற்றி அதிக அக்கறையுடன் பேசுகின்றன. தேர்தலுக்குப்பிறகு கார்ப்பரேட்களின் நலனை மையப்படுத்துகிற திட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கின்றன.

நகமும்-சதையுமாக இருந்துவந்த தேர்தலும் – ஜனநாயகமும் தற்போதைய சந்தைமய- வலதுசாரி அடையாள அரசியல் காலத்தில் எல்லாம் தலைகீழாகி, பெரும்பான்மை மத-சாதி ஆதிக்க அரசியலுக்கே வழிவகுக்கிறது. அதாவது, ஜனநாயகம் எனும் போர்வையில் ஜனநாயகமற்ற அரசியல் போக்குகள் நிரம்பி வழிகின்றன.

பலவகை இனம்-மத கலாச்சார பின்னனி கொண்ட ஒரு தேசத்தில் , வலதுசாரி அடையாள அரசியல்வாதிகளின் ‘ஒரே நாடு-ஒரே மக்கள் -ஒரே தேர்தல்’ எனும் முழக்கம் கூட, தேர்தலினூடாக, தனக்கு எதிராக உள்ள பிற அடையாளங்களை அழித்தொழிப்பது மட்டுமே ! மக்களிடையே உள்ளார்ந்து இருக்கிற இன- மத உணர்வுகளை கிளரிவிடுவது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அது,பிளவுவாதத்திற்கு துணை நிற்பதாக இருப்பது மட்டுமின்றி,ஜனநாயகம் என்பது திசைமாறி சர்வாதிகாரம் தலைதூக்குவதற்கும் வசதியாகிவிடுகிறது.

தேர்தல் சமயத்தில், அதிகாரத்தை தக்கவைப்பதற்கென்றே நடைபெறும் அனைத்துவகை வன்முறைகளையும் தடுப்பது ; வாக்காளர்களுக்கு பதில் சொல்லக்கூடிய பொறுப்பினை உணர்வது ; அரசியல் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஒற்றுமை-நல்லிணக்கத்திற்கு மாறாக செயல்படும் வலதுசாரி அடையாள அரசியல் போக்கினை தடுத்து, வாக்காளர்களுக்கு ஜனநாயகத்தினை இத்தருணத்திலாவது உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்திற்கு வலிமையை சேர்க்கக் கூடும். இல்லையேல் குடிமக்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள ஒரு வாக்கு – ஒரு மதிப்பு என்பது அர்த்தமற்றதாகிவிடும்.