” சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா,  பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்.” – என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க விமர்சித்துள்ளார்.

நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இன்று (09.10.2021) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.

அமைச்சர் சிபி ரத்னாயக்க மேலும் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச்செயலாளராக செயற்பட்டார். இவர்களின் ஆதரவு இருந்ததால் அன்று சிங்கம்போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்தார். ஆனால் பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல் செயற்படுகின்றார். பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். நாம் பாரம்பரிய வைத்திய முறைமையை மதிக்க வேண்டும்.

அன்று நாம் உர மானியம் வழங்கினோம். ஏன் அவ்வாறு செய்தோம்? விவசாயிகள், விவசாயத்தில் ஈடுபடுவது குறைந்தது. விவசாயிகளின் பிள்ளைகள் தொழிற்சாலைகளுக்குச்சென்றனர். இதனால் அரிசியைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, விவசாயத்தை பாதுகாப்பதற்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதேவேளை, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும். அடுத்த வாரத்துக்குள் நிலைமை வழமைக்கு திரும்பும்.” – என்றார்.

நிருபர் – க.கிஷாந்தன்