நோயெதிர்ப்பு குறைப்பாட்டை கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் 3 ஆவது தடவை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கிறது.

அச்சங்கத்தின் நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாடு முழுமையாக முடக்கப்படுவதன் முழு பலன்களையும் பெற வேண்டுமெனில், தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி அல்லது ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையிலாவது நீடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் மூன்றாவது தடுப்பூசியாக பைஸர், அஸ்ட்ராசெனெகா மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற, நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டு குறைந்தது 28 நாட்களுக்குப் பிறகு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே (Prof. Neelika Malavige) தெரிவித்துள்ளார்.

Prof. Neelika Malavige

தொலைகாணொளி கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளுக்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களில் மில்லியனில் 13 பேர் உயிரிழக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 65 முதல் 74 வயதிற்குட்பட்டோரில் ஒரு மில்லியனில் 22,000 பேரும், 75 வயதுக்கு மேற்பட்டோரில் ஒரு மில்லியனில் 120,000 பேரும் உயிரிழக்கக்கூடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் நீலிகா மளவிகே மேலும் கூறுகையில், மேற்கத்தேய நாடுகளில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற போதிலும், அங்கு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது பாடசாலைகளை திறக்காத 15 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என பேராசிரியர் மளவிகே மேலும் தெரிவித்தார்.