‘சிங்கராஜா’ எனும் இலங்கையின் இயற்கை வனம் அழிக்கப்படுகிறது; அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள், இலங்கை முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

இந்த எதிர்ப்புக் குரலின் ஒரு பகுதியாக, கொழும்பில் சூழலழிப்புக்கு எதிரான பெரும் ஓவியப் பதாகை, தன்னார்வலர்களால் வரையப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டது.இதை அங்கிருந்த பொலிஸார் உடனடியாக அகற்றினர். பொலிஸாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், குறித்த ஊடகக் கருத்து வழங்கலின் போது, “சூழல் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, எமது அரசாங்கம் பதவிக்கு வந்த பின்புதானே” என்று தெரிவித்தார்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒரு பொதுச் சேவையாளர்; ஆனால், அவர் “எமது அரசாங்கம்” என்று, இன்று பதவியிலிருக்கும் ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விளிப்பது பொருத்தமானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.இதைச் சுட்டிக்காட்டி, ட்விட்டரின் கருத்து வௌியிட்டிருந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் இந்தக் கருத்தை ‘இழிவானது’ என்று விளித்ததோடு, இன்றைய ஆட்சியில், பொலிஸார் எவ்வளவு தூரம் அரசியல்மயமாக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை, இது தௌிவாகக் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில், இன்றைய பொது நிர்வாக சேவையின் வரலாறு, 1802ஆம் ஆண்டு அன்றைய இலங்கையின் கொலனித்துவ ஆளுநர் நோர்த், ‘சிலோன் சிவில் சேவை’யை (CCS) ஸ்தாபித்ததிலிருந்து ஆரம்பமாகிறது. பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழிருந்த இலங்கையிலும், அண்டைய நாடுகளில் உருவானதைப் போலவே, பொது நிர்வாக சேவையும் பிரித்தானிய பொது நிர்வாகத்தின் மாதிரியைப் பின்பற்றி உருவானது.ஆனாலும், பிரித்தானியாவின் கொலனியாக இருந்தமையாலும் மிக நீண்டகாலத்துக்கு உள்நாட்டு நிர்வாகத்தில் உள்நாட்டு அரசியல் தலையீடு இல்லாமையாலும், இலங்கையின் பொது நிர்வாக சேவை பலமானதொரு நிர்வாக சேவையாக உருவானது.

19ஆம் நூற்றாண்டு முழுவதிலும், ‘சிலோன் சிவில் சேவை’யே இந்தத் தீவின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்தியது. சிலோன் சிவில் சேவைக்கான ஆரம்பகால ஆட்சேர்ப்பு, ஆள்பவர்களின் ஆதரவில் தங்கியிருந்தாலும், 1854இல் பிரித்தானியாவில் அறிமுகமான போட்டி மூலமான ஆட்சேர்ப்பு என்ற மாற்றம், அடுத்த 15 வருடங்களில் இலங்கையிலும் அறிமுகமாகி, ஏறத்தாழ 1870 அளவில் இலங்கையில் திறந்த போட்டிப் பரீட்சை மூலம், தகுதி அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் சிவில் சேவை முறை உருவாகியிருந்தது.பிரித்தானிய கொலனித்துவத்தின் இந்தச் சிவில் சேவை பற்றி, நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன; முன்வைக்கப்பட்டு வருகின்றன. “இது பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்குச் சேவகம் செய்யும் ‘கிளாக்’குகளை (எழுதுவினைஞர்) உருவாக்கும் சேவை” என்ற கருத்து, இந்த விமர்சனங்களுக்குள் பிரதானமானதும் பிரபல்யமானதுமாகும்.ஆனால், திறந்த போட்டிப் பரீட்சை மூலமான தெரிவு, அரசியல் பாரபட்சமற்ற பலமும் செல்வாக்கும் மிக்கதொரு சேவை என்பவற்றின் காரணமாக, கொலனித்துவ இலங்கையின் சமூக மட்டங்களின் ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி, தமது திறமையால் பலரும் முன்னுக்கு வரக்கூடிய வாய்ப்பை இந்தப் பொதுச் சேவை முறை வழங்கியது என்றால், அது மிகையல்ல.ஆனால் மறுபுறத்தில், சிலோன் சிவில் சேவை என்பது அளவில் மிகச் சிறியதாக இருந்தது. இதற்குள் அனுமதி பெறுவது என்பது, கடுமையான போட்டிக்கு உட்பட்டதாக இருந்தது.

இதனால், சிலோன் சிவில் சேவைக்குள் அனுமதி பெறுவது என்பது, பெரும் கௌரவமான நிலையாக மாறியது. இதுவே சிலோன் சிவில் சேவை உத்தியோகத்தர்கள், அச்சேவையைச் சாராத அதற்குக் கீழான உத்தியோகத்தர்கள் என்ற ஏற்றத்தாழ்வைப் பொதுச் சேவையில் உருவாக்கியது.இதன் விளைவாக, இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ற்குப் பின்னர், பொதுச் சேவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுப்பப்பட்டன. சிலோன் சிவில் சேவை, இலங்கை பொதுச் சேவையின் ஒரு ‘மேட்டுக்குடி’ யாகப் பார்க்கப்பட்டது. இதற்கு சுதந்திர இலங்கையின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளுக்கு, சிலோன் சிவில் சேவை முழுமையான ஒத்துழைப்புத் தராத நிலையும் ஒரு காரணம்.மறுபுறத்தில், இலங்கையின் சுதந்திரம் வரை இலங்கையின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் யதார்த்தத்தில் பொறுப்பாக இருந்தது, சிலோன் சிவில் சேவைதான்.

அந்தநிலை சுதந்திரத்துக்குப் பின்னர் மாறுவதை, சிலோன் சிவில் சேவையும் விரும்பி இருக்காது. இதுதான் இந்த முரண்பாட்டுக்குக் காரணம்.சிலோன் சிவில் சேவை முறை ஒழிக்கப்பட வேண்டும்; அனைத்துப் பொதுச் சேவையாளர்களும் ஓர் அரச பொதுச் சேவையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற குரலுக்கு ஆதரவாக, இந்தப் பிரச்சினையை ஆராய அமைக்கப்பட்ட வில்மட் பெரேரா ஆணைக்குழுவும் தனது பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.இவற்றின் விளைவாக, 1963 இல் சிலோன் சிவில் சேவை ஒழிக்கப்பட்டு, அனைத்துப் பொதுச் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் சிலோன் நிர்வாக சேவை ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே பின்னர், ஸ்ரீ லங்கா நிர்வாக சேவை ஆகியது. ஆனால், சிலோன் சிவில் சேவை, இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஒன்றைக் கற்றுக்கொடுத்திருந்தது.

பலமான, சுயாதீனமான, பாரபட்சமற்ற நிர்வாக சேவை ஒன்று, இந்த நாட்டில் காணப்படுவது அரசியல்வாதிகளின் நலன்களுக்கு ஏற்புடையதல்ல என்பதே அது. ஆகவே, சிலோன் சிவில் சேவையைப் போன்றதொன்று மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்படுவதை, அரசியல்வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.இதற்கு அர்த்தம், ஸ்ரீ லங்கா சிவில் சேவையில் தரமான, தகுதிவாய்ந்த, திறமையுள்ள உத்தியோகத்தர்கள் இல்லை என்பதல்ல. மாறாக, முழுமையாகப் பார்க்கும் போது, 1963இல் ஏற்பட்ட பொதுச் சேவையின் ஒருங்கிணைப்பு என்பது, இந்தத் தீவின் பொதுச் சேவையின் தரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது டி.விஜேசிங்ஹ கருத்தாக இருக்கிறது.மேலும், இன்று பொதுச் சேவையில் அரசியலின் தலையீடு அதிகரித்திருக்கிறது.

சுயாதீனமாகச் செயற்படும் பொதுச் சேவை அதிகாரிகள், முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுடனும், அவர்களின் ஆதரவாளர்களுடனும் ஏதோ ஒரு வகையில் முரண்பட வேண்டி இருக்கிறது. குறித்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில், அல்லது அவர்கள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும்போது குறித்த பொதுச் சேவை அதிகாரிகள் பல்வேறு அழுத்தங்களையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.மேலும், பொதுச் சேவையின் பதவி உயர்வுகள், கௌரவ நியமனங்கள், இடமாற்றங்கள் ஆகியவற்றிலும் அரசியலில் நேரடியானதும் மறைமுகமானதுமான தலையீடுகளைக் கொண்டிருப்பதும், அரசியல்வாதிகளின் பிடியில் பொதுச்சேவையை சிக்க வைத்துள்ளது. இதற்கு எதிராக, அவ்வப்போது துணிந்து நிற்கும் பொதுச் சேவை அதிகாரிகள் பலரையும் நாம் காணக்கிடைத்தாலும், அவர்களுக்குத் தமது கடமையைச் செய்வது அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை.இதனாலேயே ஆட்சியில் உள்ளவர்களோடு ஒன்றி, தமது பிழைப்பைப் பாதுகாத்துக்கொள்ளும் கலாசாரம் பொதுச் சேவைக்குள் ஒரு புற்றுநோயைப்போல பரவிவருகிறது என்ற கவலை பலருக்கும் உண்டு.

ஆட்சிகள் மாறலாம்; அரசாங்கங்கள் மாறலாம்; ஆனால், பொதுச் சேவை என்பது நாட்டுக்கானது; மக்களுக்கானது என்ற அடிப்படையில், அது ஆட்சிகளுக்கும், அரசாங்கத்துக்கும் மாறிக்கொண்டும், அவற்றின் தாளத்துக்கு ஆடிக்கொண்டும் இருக்கக்கூடாது. அதுவே முறையானதொரு பொதுச் சேவைக்கு அழகு.பொதுச் சேவையில் அரசியல் மயமாக்கல் என்பது வெறுமனே பொதுச்சேவையை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல. அது ஒட்டுமொத்த நாட்டின் நிர்வாகத்தையும் பாதிப்பதாக அமையும். ஒரு நாட்டின் நிர்வாகமானது அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கேற்ப வளைந்துகொடுக்கத் தொடங்கும் போது, நிர்வாகத்தில் பக்கச்சார்பும் பாரபட்சங்களும் தலையெடுக்கும்; அந்த நாட்டின் நிர்வாகம் சீர்கெடும்; அதன் ஒழுங்கு பாதிக்கும்; எதேச்சாதிகாரம் தலையெடுக்கும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும்; நீதி நசுக்கப்படும்; நியாயம் மறுக்கப்படும்; ஒட்டுமொத்தத்தில் அரச நிர்வாக இயந்திரமே பழுதுபடும்.பொதுமக்கள், அவர்கள் எந்த அரசியல் சார்பு நிலையுடையவர்களாக இருந்தாலும், எந்த அரசியல்கட்சியின் அல்லது அரசியல் தலைமையின் விசுவாசிகளாக இருந்தாலும், பொதுச் சேவையின் அரசியல் மயமாக்கலைத் தடுத்து நிறுத்துவதற்கு குரல் எழுப்ப வேண்டியது அவசியம்.

ஏனென்றால், இது அனைவரையும் பாதிக்கும் பிரச்சினை. இந்த நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும் பிரச்சினை.