அரசாங்கம் அர்த்தமில்லாமல் நாட்டை முடக்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மருத்துவர் ருஷான் பெல்லன கூறுகிறார். மக்களின் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருந்தாலும், அப்படி நடக்கவில்லையெனவும் அவர் கூறுகிறார்.

அதேபோன்று தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியிருந்தால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காதெனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சமூகத்தின் தலைவர் மேலும் கூறுகிறார்.

மருத்துவர் ருஷான் பெல்லன கூறுவதற்கேற்ப, நோய் தொற்றியவர்கள் வேகமாக அதிகரித்தல் மற்றும் மரணங்கள் அதிகரித்தல் காரணமாக தடுப்பூசி செயல்முறைகள் எந்த வெற்றியையும் காட்டவில்லை.

இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் தாமதமாகியமையும் மற்றும் செயற்பாட்டின் தோல்வியும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். உதாரணமாக, தொற்று நோய்ப் பிரிவினால்தான் தடுப்பூசி ஏற்றப்படல் வேண்டும். ஆனால் வேறு தரப்பிடம் இது ஒப்படைக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார். தவிரவும், இரண்டாவது தடுப்பூசி குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படல் வேண்டுமென பரிந்துரைத்திருந்த போதிலும், சில தடுப்பூசிகளின் இரண்டாவது தடுப்பூசி சில மாதங்களுக்குப் பின்னரே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.