தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று (04) இரவு 7 மணியுடன் நிறைவடைகின்றது.

இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் திகதி கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெற இருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவார்கள்.

இன்று (04) இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்கின்றது. அத்துடன் கடந்த சில வாரங்களாக, ‘அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே…’ என்று வீதி எங்கும் ஒலித்த குரலும் அடங்கிவிடும். வேட்பாளர்களும் வாக்குப்பதிவையும், வாக்கு எண்ணிக்கை முடிவையும் எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.

இன்று இரவு 7 மணிக்கு முன்னதாக, பிரசாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விடவேண்டும். இனி கருத்து கணிப்புகளும் வெளியிட முடியாது. மதுக்கடைகளும் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் நாளை மறுநாள் (06) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகின்றது. இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ‘விவிபேட்’ கருவி ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 807 எந்திரங்களும் இணைக்கப்பட உள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை மறுநாள் 06 ஆம் திகதி இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2 ஆம் திகதி காலை, இந்த பெட்டிகளில் உள்ள ‘சீல்’ உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மாலைக்குள் ஆட்சி அமைப்பது யார்? என்பதும் தெரிந்துவிடும்.

பிரசாரம் நிறைவடையும் இறுதி நாளான இன்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலும், பிரசாரம் முடியும் நேரத்தில் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.