தமிழ் இனப்படுகொலையை பிரித்தானியா ஒருபோதும் மறக்காது என்று, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கார்ஷல்டன் மற்றும் வெலிங்டனுக்கான உறுப்பினருமான எலியட் (Elliot Colburn, Chair of All-Party Parliamentary Group for Tamils and MP for Carshalton and Wallington) தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா வாழ் தமிழர்கள் பிரித்தானிய நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்ததுடன், ஸ்ரீலங்காவில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் தொடர்ந்து 8 வருடங்களாக இந்த மாநாட்டை நடத்ததிவருகின்றது.

அந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், கார்ஷல்டன், ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கான தனது ஆதரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச மன்றங்களில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என மாநாட்டில் உரையாற்றிய வட்போர்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் ரஸ்ஸல் (Dean Russell, MP for Watford) தெரிவித்துள்ளார்.
 
தமிழர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஹர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் (Robert Halfon, MP for Harlow) கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு சுயாட்சி காணப்படாத நிலையில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும், அந்த மக்கள் நீதி மற்றும் சுயநிர்ணயத்திற்கு தகுதியானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஷவேந்திர சில்வா போன்ற போர்க்குற்றவாளிகளுக்கு தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும், இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ராஜபக்ச ஆட்சியின் கீழ் மனித உரிமைகள் விரைவாக தடுக்கப்படுவதையும், இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறலை மாற்றியமைப்படுகின்றமை குறித்து, சிப்பிங் பார்னெட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸ் (Theresa Villiers, MP for Chipping Barnet) எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்காவின் சீர்திருத்த மறுப்பு தெளிவாவதாக வில்லியர்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.