நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் துறைமுக நகர் தொடர்பான ஆணைக்குழு சட்டமூலத்தை தயாரித்துள்ளது. 

இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை தெரிந்தே சீரழிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அவ்வாறனதொரு  பாதகமான நிலைமை ஏற்படுமாயின் அதிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு  நீண்ட காலம் தேவைப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

துறைமுக நகரத்தை சூதாட்ட ஸ்தலமாகவும் கறுப்பு பண பரிமாற்ற நிலையமாகவும் மாற்றும் நோக்கம் இல்லையெனில் அரசாங்கம் அதனை தெளிவாக அறிவிக்க வேண்டும். 

அத்தோடு இதற்கான திருத்தங்களை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் தொடர்பில் நேற்று ஞாயிறுக்கிழமை காணொளியொன்றின் மூலம் விசேட அறிவிப்பை விடுத்த போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அதில் அவர் மேலும் கூறியதாவது :

தற்போது நாட்டின் எதிர்காலம் குறித்து முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டிய நேரமாகும். குறிப்பாக எமது பொருளாதாரம் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. 

கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் தொடர்பில் முறையான தெளிவுபடுத்தல் இன்மையால் துறைமுக நகரம் கறுப்பு பணத்தை மாற்றும் மத்திய நிலையமாக மாற்றமடையுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

2011 இல் வரி தொடர்பில் ஒழுக்கமற்றதும் கறுப்பு பணத்தை சேகரிக்கும் மத்திய நிலையம் என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. 

எனினும் 2015 இல் நாம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இலங்கையை அந்த பட்டியலிலிருந்து நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தோம். 

2018 இல் இலங்கை இந்த பட்டியலிலிருந்து எமது நாடு முழுமையாக நீக்கப்பட்டது. எனினும் இந்த நிலைமை பாதுகாக்கப்படுமா என்பது எமக்குத் தெரியாது.

ஆசியாவில் பிரதான நிதி மத்திய நிலையங்களைக் கொண்டுள்ள டோக்கியோ , ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அவற்றின் மத்திய வங்கிக்கு சூது செயற்பாடுகளுக்கான அனுமதியளிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.

 ஆனால் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு இவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மத்திய வங்கியிடம் முழுமையான நிர்வாக அதிகாரமும் வழங்கப்படவில்லை. இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதன் நோக்கம் இணையவழியூடாக சூது ஸ்தானங்களை உருவாக்குவதேயாகும்.

இவ்வாறு இணையவழியூடாக சூது ஸ்தானங்கள் உருவாக்கப்பட்டால் உள்நாட்டில் அனைத்து கையடக்க  தொலைபேசிகளிலும் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு , சர்வதேசத்திலிருந்து கறுப்பு பணத்தை கொண்டு வந்து அதனை இங்கு மாற்றக் கூடிய நிலைமையும் ஏற்படும். 

அவ்வாறெனில் இலங்கை மீண்டும் ஒழுக்கமற்ற வரி செயற்பாடுகளுடன் தொடர்புடைய கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எவ்வாறு வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது?

சூது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் நிதி அமைச்சிற்குரியது. ஆனால் இங்கு நிதி அமைச்சிற்கான அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது ? சூது செயற்பாடுகளுக்கு இடமளித்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் பணத்தினூடாக வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவே முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் எதிர்பார்ப்பு இல்லை என்றால் நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

ஏன் மத்திய வங்கிக்கு முழுமையான நிர்வாக அதிகாரம் வழங்கப்படவில்லை? நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இதற்கான திருத்தத்தினை முன்வைக்க வேண்டும். 

இதன் நடவடிக்கைகள் ஏன் நாடாளுமன்ற நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற ஏன் நாடாளுமன்றத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை? சட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் உட்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இது சிறந்த நிதி செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்கமுடைய சேவை வழங்கும் மத்திய நிலையம் என்று ஏற்றுக் கொள்ள முடியும். எனினும் அந்த நிலைக்கு செல்வதற்கும் 10 – 15 ஆண்டுகள் தேவைப்படும்.

மாறாக அவசரமாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் கறுப்பு பணத்தை மாற்றுவதற்கான மத்திய நிலையமாகவே இதனை கருத வேண்டியேற்படும். எனவே இது கறுப்பு பண மத்திய நிலையம் இல்லை என்றால் அதனை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். 

அதற்கான திருத்தம் தற்போதுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அந்த திருத்தங்களை முன்வைக்க வேண்டும். 

அவ்வாறில்லை என்றால் இது கறுப்பு பணத்தை மாற்றக் கூடிய மத்திய நிலையமாகவே காணப்படும். அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாரிய பாதிப்பாகும்.

அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை எடுக்குமா இல்லையா என்பதை எமக்கு அறிவிக்க வேண்டும். இதன் மூலமே எமது எதிர்காலத்தை எம்மால் அறிந்து கொள்ள முடியும். 

இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை தெரிந்தே சீரழிக்க வேண்டாம். பாதகமான நிலைமை ஏற்படுமாயின் அதிலிருந்து மீள்வதற்கு எமக்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றார்.