தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள 153 ஊடகங்கள் இதுவரை மூடப்பட்டதாக நேற்று(14) செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை கேள்விக் குறியாகும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டோலோ செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானின் 20 மாகாணங்களில் உள்ள பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் என 153 ஊடக நிறுவனங்கள் கடன் மற்றும் தலிபான்களின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஹுஜத்துல்லா முஜாடாதி கூறுகையில், “அமைப்பை ஆதரிக்கும் ஊடகங்கள் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லையெனில் விரைவில் நாட்டில் உள்ள பிற ஊடகங்களையும் மூடும் நிலை உருவாகும்.”

இது குறித்து பத்திரிகையாளர் மஸ்ரூர் லுட்ஃபி கூறியது, “இது போன்ற சம்பவங்கள் தொடரும் நிலை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க சர்வதேச ஊடகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையெனில், விரைவில் பத்திரிகை மற்றும் மக்களின் சுதந்திரம் பறிபோகும்.”

இந்நிலையில் முன்னதாக கடந்த வாரம் காபூலில் நடைபெற்ற போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் இருவரை கைது செய்த தலிபான்கள், அவர்களை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது