எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, யார் வெல்வார்கள்? என்பது குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அதேசமயம், கிட்டத்தட்ட அவை அனைத்தும் திமுக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றே தெரிவிக்கின்றன.

அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று சொன்னாலும், கடந்த 1971 மற்றும் 1996 தேர்தல்கள் போல், திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறவில்லை.எனவே, இந்த கருத்துக் கணிப்புகளை திமுக முகாமில் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் கூறியதாவது; எங்கள் தலைவர் திரு.ஸ்டாலின் இந்த கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்துவதேயில்லை. கடந்த 2016 தேர்தல் போல், எச்சரிக்கையாக இருந்து கடுமையாக களப்பணி ஆற்றுமாறு எங்கள் நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் கருத்துக் கணிப்புகள் கூறும் எண்ணிக்கையையும் நம்பவில்லை. திமுக கூட்டணிக்கான மொத்த எண்ணிக்கை எப்படியும் 200ஐ தாண்டும் என்பதுதான் எங்கள் தலைவரின் அசராத நம்பிக்கை.கடந்த மக்களவைத் தேர்தலிலும் நமக்கான இடங்களை, குறைவாகத்தான் கணித்தார்கள். ஆனால், நடந்தது வேறு. எனவே, இப்போதும் கருத்து கணிப்புகள் குறித்து கவலைப்படாமல் நாம் பணியாற்றினால், நமக்கான வெற்றி வேறுமாதிரியாக இருக்கும் என்பதே எங்கள் கட்சி தலைமையின் நிலைப்பாடு என்கின்றனர் அவர்கள்.