தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய போதகர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை விருப்பம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமைதியையும் சட்ட விதிகளையும் பாதுகாப்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டி கொழும்பு மறைமாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனைத்து குடிமக்களும் இதை அவசரமாக செயற்பட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்த குற்றத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டமிட்டவர்கள், நிதி உதவி, அரசியல் ஆதரவை வழங்கியவர்கள் என தொடர்புபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த தீவிர இஸ்லாமிய குழுக்கள் அனைத்தும் உடனடியாக தடை செய்ய்யப்படவேண்டும் என்றும் கொழும்பு மறைமாவட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் 269 அப்பாவி பொதுமக்களை கொன்ற மற்றும் 300 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்திய குற்றவாளிகளை தண்டிக்க தவறினால் எதிர்ப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.