ஏ எல் ஜுனைதீன் துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு மாநிலமே பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

5 நாட்களுக்கு முன் ஏற்பட்ட காட்டுத்தீ பலத்த காற்று எதிரொலியாக துருக்கியில் தீவிரமாக பரவி வருகிறது. 5வது நாளான நேற்று முக்லா என்ற மாநிலத்தின் மக்கள் வசிப்பிடங்களுக்கு காட்டுத்தீ பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஒரு நகரம் முழுவதையுமே காட்டுத்தீ கபளீகரம் செய்திருக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அன்டால்யா என்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தையும் அழித்துவிட்ட காட்டுத்தீ, 8 பேரின் உயிர்களை பறித்து சென்றுள்ளது.

கடந்த ஜூலை 28ம் திகதி முதல் அன்டால்யா மாநிலத்தில் மட்டும் 112 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறும் துருக்கி வனத்துறையினர், அதில் 107 இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தீவிரமாக பரவும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.