“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நாட்டுக்குள் ஊடுறுவி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவற்கு அரசு முனைப்புடன் செயற்படவில்லை.”

  • இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான ஒருதொகை பாதுகாப்பு அங்கிகள், ஒளடதங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, வெளிநாட்டிலுள்ள நண்பர்களது ஒத்துழைப்பில் நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளுக்கு குறித்த உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எதிர்வரும் நாட்களின் குறித்த பொருட்களை வைத்தியசாலைகளுக்குப் பிரித்துக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

விசேடமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச்., கராப்பிட்டிய பொதுவைத்தியசாலை, நாகொடை பொதுவைத்தியசாலை, பதுளை, கண்டி பொது வைத்தியசாலை, கிளிநொச்சி வைத்தியசாலை, இரத்தினபுரி, அனுராதபுரம், குருநாகல் ஆகிய பிரதான வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நாட்டுக்குள் ஊடுறுவி ஒன்றறை வருடங்கள் கடந்துள்ளன. இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவற்கு அரசு முனைப்புடன் செயற்படவில்லை.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய சுகாதாரத்துறைக்குத் தேவையான சலுகைகள், உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதை கைவிட்டுவிட்டு அரசு செயற்படுகின்றது.

அத்தியாவசவிய உபகரணங்கள், ஒளடதங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் முறையான செயற்றிட்டங்கள் இல்லை.

எனவே, சுகாதாரத் துறையினரும் தொற்றுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது” என்றார்.