அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபை கூட்டம் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மாநாட்டுக்காக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அவர் தனது உரையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் ஹிலானி குறித்தும் பிரச்சினையை கிளப்பினார்.

இதற்கு ஐ.நா. பொது சபையில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஐ.நா. பொது சபையில் இந்தியாவின் முதல் செயலாளர் சினேகா துபே இது தொடர்பாக கூறியதாவது:-

பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான். பயங்கரவாதிகளை வெளிப்படையாக ஆதரிப்பதற்கும், ஆயுதங்களை வழங்குவதற்கும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அதிக அளவில் பாதுகாப்பு அளித்து வருகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தடை செய்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது.

ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான்தான் அடைக்கலம் கொடுத்தது உலகிற்கே தெரியும். இன்று வரை அவரை பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் தியாகியாக புகழ்ந்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது, நிதி உதவி செய்வது, பயிற்சி அளிப்பது மற்றும் தீவிரமாக ஆதரிப்பது என்பது பாகிஸ்தானின் நீண்ட கால கொள்கையாக இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து பழிச்செயல்களை செய்வதில் சாதனை படைத்து உள்ளது.

வெளியில் தீயணைப்பு வீரர் போல் காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் உன்மையில் தீக்குளித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்து நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொல்லைப் புறத்தில் பயங்கரவாதிகளை உருவாக்கி வளர்க்கிறது.

பாகிஸ்தானின் கொள்கையால் முழு உலகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையை பயங்கரவாத செயல்களாக மறைக்க முயற்சிக்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் பிரதமர் தங்கள் நாட்டுக்கு எதிராக பொய் பிரசாரம் பரப்பப்படுவதாக கூறுகிறார். ஐ.நா.சபையை தவறாக பயன்படுத்துகிறார். பொய்யான பரப்புரைகளை பாகிஸ்தான் தலைவர்கள் பரப்புவது இது முதல் முறை அல்ல என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாகிஸ்தான் போல் இல்லாமல் இந்தியாவில் எல்லா வகையிலும் சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரமான நீதித்துறை கொண்ட நாடு இந்தியா. நமது அரசியல் அமைப்பை பாதுகாக்கிறது. உலக அரங்கில் கேலிக்கு ஆளாகும் முன்பு பாகிஸ்தான் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக இருந்துள்ளது. எதிர்காலத்திலும் அது அப்படியே இருக்கும். பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதிகள் இதில் அடங்கும்.

சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும் விட்டு பாகிஸ்தான் உடனே வெளியேறு மாறு நாங்கள் கூறுகிறோம்.