அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வுகளை மே 04ஆம் மற்றும் 05ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்வரும் 05ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை விவாதத்துக்கு எடுப்பதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு அமைய கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 04ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக தஸநாயக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கூடும் இரண்டு தினங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை முன்வைப்பதற்கும், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளை முன்வைப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மே 04ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரையான காலப் பகுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான 04 அறிவித்தல்கள், சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம், உண்ணடாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை விவாதத்துக்கு எடுப்பதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

அத்துடன், மே 05ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையான காலப்பகுதியில் மதியபோசன இடைவேளைக்காக சபையை ஒத்திவைக்காது கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் நடத்தப்படவிருப்பதாக தஸநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.