பெருந்தோட்ட காணிகளில் பாற் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன்  என இ.தொ.காவின் உபத் தலைவர்   செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து பாற் பண்ணைகளை அமைக்க உகந்த இடங்களை அடையாளம் கண்டு இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், குறித்த அரச பெருந்தோட்டங்களில் மீள் தேயிலை உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு எடுத்துரைத்துள்ளார்.

பெருந்தோட்டக்காணிகளை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவது தொடர்பில் இ.தொ.கா மெளனம் சாதித்து வருவதாக எதிர் தரப்பினரால்  குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக  முன்வைக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். இ.தொ.கா ஆரம்பகாலம் முதல் இன்று வரை மலையக மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலேயே அக்கறை காட்டிவந்துள்ளது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டக்காணிகளை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்பதை குறித்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கிய மறுநாளே பெருந்தோட்டத்துறை அமைச்சருக்கு நேரடியாகத் தொடர்புக்கொண்டு  நான்  எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.இ.தொ.கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக உள்ள போதிலும் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு முடிவுக்கு ஆதரவளிக்காது என்பதை தெளிவாக சுட்டிகாட்டியுள்ளேன்.

ஜேஈடிபி அரச கம்பனிக்கு சொந்தமான 1161 ஹெக்டேயர் காணியை பாற்பண்ணை அமைக்க கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு உத்தியோகப்பூர்வமாக கடிதத்தையும் எழுதியுள்ளேன் .

இந்தக் காணிகளில் மீண்டும் தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் 1161 ஹெக்டேயர் காணியில் வருடத்திற்கு சுமார் 34 இலட்சத்தி 83ஆயிரம் கிலோகிராம் பச்சை கொழுந்தை உற்பத்தி செய்ய முடியும். அதில் 7 இலட்சத்தி 60ஆயிரம் கிலோ கிராமை தேயிலை தூளாக உற்பத்தி செய்ய முடியும். தற்போதைய விலையின் பிரகாரம் ஒரு கிலோக்கு 570 என்ற பெறுமதியை கணக்கிட்டால் 10 சதவீதம் தேயிலை கழிவு போக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு வருவாயாக ஈட்ட முடியும் என்பதுடன், 800 தொழிலாளர்களுக்கு 240 நாள்கள் வருடத்திற்கு வேலைவாய்ப்பையும் வழங்க முடியும்.

பாற்பண்ணை அமைக்கும் திட்டங்கள் மேற்படி காணிகளில் கொண்டுவரப்படும் பட்சத்தில் இதன் பாதிப்பு மலையகத்திற்கு மாத்திரமல்ல இலங்கை தேயிலை உற்பத்தியில் ஈட்டப்படும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பாற்பண்ணை திட்டங்கள் நாட்டுக்கு அவசியமாகும். ஆனால், அதற்கு ஏற்கனவே அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட பாற்பண்ணை அமைக்க உகந்த இடங்களை   பயன்படுத்த வேண்டும் என்பதுடன், விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களில் பாற்பண்ணைகளை உருவாக்கும் பட்சத்தில்  தேயிலைத் தோட்டங்களும் வளர்ச்சியடையும் பாற்பண்ணைகளும் வளர்ச்சியடையும் என்பதை தெட்டத்தெளிவாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இ.தொ.கா சார்பாக நான்  வலியுறுத்தியுள்ளதுடன், அமச்சரவை தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் . 

அது மாத்திரமின்றி அடையாளம் காணப்பட்ட காணிகளில் மக்களின் வாழ்வாதாரங்களும் உள்ளன. குறிப்பாக லயன் அறைகள், கோயில்கள், பாதை ,மைதானங்கள்,சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்  பொதுவான இடங்கள்,  என அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் பட்சத்தில் மக்களின் உரிமைகளும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது. தேயிலை தோட்டங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுடன், பால் பண்ணைகளும் வளர்ச்சியடைய வேண்டும். அதன் காரணமாக இத்திட்டத்திற்கு மாற்று இடங்களை வழங்குவது காலத்துக்கு ஏற்றத் தீர்வாக இருக்கும். இ.தொ.காவின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுமென்று நம்புகிறேன் என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.