அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால விதிமுறைகளின் கீழ், அவ்வாறு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்த போதிலும், சந்தையில் அரிசியின் விலை குறையவில்லை என்று பல அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உடனடித் திட்டத்தை உருவாக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பையும் அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது, ஆனால் சீனி விலை ஓரளவு குறைந்த போதிலும் அரிசியின் சந்தை விலை குறையவில்லை என நுகர்வோர் கூறுகின்றனர்.

இந்நிலையில் அரிசி சந்தையை கட்டுப்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் அரிசியை கொள்முதல் செய்து சந்தைக்கு வெளியிடுமாறும் வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமைய இன்று முதல் பொலநறுவை மற்றும் முக்கிய பல இடங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.