மலையகத் தொழிலாளர்களின் வாழ்வியலோடு தொழிற்சங்கங்கள் என்பது இரண்டறக் கலந்துள்ளன. எனவே, தொழிலாளர்களை தொழிங்சங்கங்களிடமிருந்தும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்களிடமிருந்தோ பிரித்து பார்க்க முடியாத ஒரு பிணைப்பு தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்குமிடையில் காணப்படுகின்றது.

இந்த உறவு இன்று நேற்றல்ல. மலையகப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்காக அமைப்பு ரீதியாக முதலாவது தொழிற்சங்கத்தை ஆரம்பித்த கோ. நடேசய்யரோடு மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான உறவுகள் ஆரம்பமாகின்றன.

இவரைத் தொடர்ந்து மலையக மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதற்காக இன்று வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 20க்கும் குறைவான சங்கங்கங்களே தொழிலாளர்கள் மத்தியில் செயற்படுவதாகவும் அதில் பத்துக்கு குறைவான தொழிற்சங்கங்களே பரந்து பட்ட ரீதியில் செயற்படுவதாக எழுத்தாளர் திரு. அந்தினி ஜீவாவின் நூல் ஒன்றின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இவ்வாறான தொழிற்சங்கங்களில் ஏதாவது தமக்கு விருப்பமான தொழிற்சங்கமொன்றில் சந்தாவை செலுத்தி அங்கத்துவம் வகிப்பதென்பது தொழிலாளர்களின் உரிமை என்பதுடன், அவசியமான விடயமும் ஆகும்.

இவ்வாறு தொழிலாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் ஊடாக அறவிடப்படும் சந்தா தொழிலாளர்சார் நலனுக்காகவும், தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்குமிடையில் ஏற்படும் முரண்பாடுகள் நீதிமன்றம் வரை செல்லும் போது, அதற்காக தொழிலாளர்கள் சார்பில் வாதாடும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட விடயங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவே அறிந்திருப்போம்.

ஆனால் அதையும் தாண்டி எத்தனை தொழிற்சங்க பணியாளர்களின் குடும்பங்களை இச்சந்தா பணம் வாழ வைக்கிறது என்பது, தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யபட்டு, தொழிலாளர்களிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் சந்தாவை தோட்ட நிர்வாகங்கள் இடைநிறுத்திய பின்னரே அறிய முடிகின்றது.

தொழிலாள்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பாலமாக இத்தொழிற்சங்க பணியாளர்களே விளங்குகின்றமை மறுக்க முடியாத விடயம்.

உண்மையில் கூறப்போனால், தொழிலாளர்களின் சந்தா பணத்தை நிர்வாகம் அறவிட வேண்டிய தேவையே இல்லை எனலாம். ஆனால் தொழிற்சங்கங்களுடனான ஒரு இணக்கப்பாட்டுக்கு அமையவும், தொழிற்சங்கங்களின் பணியை இலகுவாக்குவதற்காகவுமே தோட்ட நிர்வாகங்கள் சந்தாவை சேகரித்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தன.

ஆனால் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகளைத் தாண்டி, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்த உடனேயே, தொழிற்சங்கங்களுக்கு சந்தா சேகரித்து அனுப்பி வைக்கும் நடவடிக்கைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆப்பு வைத்துள்ளன.

“உனக்கு தேவையெனின் தோட்டம் தோட்டமாக நீயே வந்து சந்தா பணத்தை சேர்த்துக்கொள், எமக்கு இது தேவையில்லாத வேலை“ என ஒதுங்கிக்கொண்ட பின்னரே இதனை நம்பியுள்ள பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிலாளர்களிடம் இருந்து மாதாந்தம் இலட்ச கணக்கில் சந்தாவை பெறுகிறார்களே இவர்களுக்கு தொழிலாளர்களின் வேதனை புரியாதா? இவர்களுக்கு மாதா மாதம் சந்தா எனும் பெயரில் “கட்டமொய்” எழுதுகிறோமே என மிக மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த தெரிந்த எம்மில் பலருக்கு,

தமது தொழிற்சங்க அலுவலகங்களில் பணியாளர்களின் பசியைப் போக்குவதும் இந்த சந்தா பணமே தான் என்பது தெரியாத விடயமாக கூட இருக்கலாம்.

எனவே, இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து சந்தா சேகரித்து அனுப்பும் பணியை தோட்ட நிர்வாகங்கள் இடைநிறுத்தியதன் பின்பு குறித்த சில தொழிற்சங்கங்களின் தலைமைத்துவங்கள் தமது சொந்த நிதி, அலுவலக மற்றும் சங்கங்களின் இருப்பிலிருக்கும் நிதியைப் பயன்ப பணியாளர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில தொழிற்சங்கங்கள் இந்தா சந்தா நிறுத்தம் அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை காரணம் காட்டி சில பயிற்சி பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளதுடன், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிகளில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

ஆனால் நாடுபூராகவும் 44 தொழிற்சங்க அலுவலகங்களைக் கொண்டுள்ள மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமொன்று, தொழிற்சங்கத்துக்கான சந்தாவை தோட்ட நிர்வாகங்கள் இடைநிறுத்தினாலும் தமது தொழிற்சங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தமது தொழிற்சங்க அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் எவரும் பணி நீக்கம் செய்யப்படவுமில்லை. அவர்களது கொடுப்பனவுகளில் தாம் கைவைக்கவும் இல்லை. எமது கட்சியின் நிதியைப் பயன்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருகிறோம் என அத்தொழிற்சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அதேப்போல் கொழும்பில் தலைமை அலுவலகத்தையும் மலையகம் உள்ளிட்ட பல இடங்களில் 46 அலுவலகங்களையும் 206 பணியாளர்களையும் கொண்டுள்ள மற்றுமொரு பிரதான தொழிற்சங்கமானது, நிலையான வைப்புகள் தமது தொழிற்சங்கத்திடம் இருப்பதால் அதனை பயன்படுத்தி பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வருவதுடன், கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதி வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாடகை பணத்தையும் தொழிற்சங்க பணியாளர்களின் செயற்பாடுகளுக்காக வழங்கி வருவதாக அத்தொழிற்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

அதேப்போல் மலையகம் முழுவதும் 27 அலுவலகங்களும் 56 பணியாளர்களையும் கொண்டுள்ள தொழிற்சங்கமொன்றின் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே இந்த பணியாளர்களுக்கு அத்தொழிற்சங்க தலைவரின் சொந்த நிதியைப் பயன்படுத்தியே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த மாதம் தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த சந்தா பணம் சேகரிப்பு சேகரிப்பு நடவடிக்கை களனிவெளி, அக்கரப்பத்தனை, ஹட்டன், கொட்டகலை பிளான்டேசன் நிறுவனங்களின் தோட்டங்களிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புஸல்லாவ,பொகவந்தலாவை, அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழான தோட்டங்களிலிருந்து தொடர்ச்சியாக சந்தா அறிவிடப்பட்டு தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்படுவதாக சில தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

“ மலையகத்தில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் நோக்கில், சந்தா இல்லாத அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க அனைவரும் முற்போக்காக சிந்தித்து ஒன்று திரள வேண்டும். என வாய்க்கு வந்த்தையெல்லாம் அறிக்கையாக வெளியிடுபவர்களுக்கு, சந்தா இல்லாமல் தொழிற்சங்க பணிகளை முன்னெடுப்பது இயலாத காரியம் என்பது புரியவில்லை.

எனவே, சந்தா பெறுவது தவறான விடயம் அல்ல. இந்த சந்தா வசூலிப்பு விடயத்தில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பது சிறந்தது. அதாவது இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகங்களை தொழிற்சங்கங்கள் நம்பிக்கொண்டிருக்காமல் தமது தொழிற்சங்க பணியாளர்களை ஒவ்வொரு தோட்டங்களுக்கும் அனுப்பி சந்தா பணத்தை சேகரிப்பதே சிறந்த வழிமுறையாகும்.

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் சந்தா பணத்தை தன்னார்வமாக வழங்கிய போது தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான உறவு பலமாக இருந்தது.

ஆனால் சந்தா சேகரிப்பு விடயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம் என்பது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்துக்குமிடையிலான உறவுக்கு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சந்தா வசூலிப்பு விடயத்தில் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினையை தொழிற்சங்கங்கள் நேரடியாக அறியும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகளை பலப்படுத்தவும், தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் சந்தா என்பது அவசியமாகிறது.

மாறாக சந்தா இல்லாத தொழிற்சங்க முறையே மலையகத்தில் மாற்றம் கொண்டு வரும் என கூப்பாடு போட்டாலும், கூட்டுஒப்பந்தமோ அதன் பின்னரான சம்பள அதிகரிப்போ சந்தா சேகரிப்பு விடயத்திலோ சந்தாவை அடிப்படையாக கொண்ட தொழிற்சங்க முறைக்கோ எவ்வித தடையும் ஏற்படவில்லை. கூறப்போனால் பெருந்தோட்ட நிறுவனங்கள், சந்தா உரிமையில் கைவைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

எனவே, இந்தா சந்தா சேகரிப்பை காரணம் காட்டி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமக்கிருக்கும் பொறுப்பிலிருந்து விலகாமல், பெருந்தோட்ட நிறுவனங்கள் சந்தா தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு முன்வைத்துள்ள சவாலை முறியடித்து, தமது பணிகளில் மூலமாக தொழிலாளர்களுக்கு சேவைகளை வழங்கி, தொழிலாளர்களை சந்தாதாரர்களாக மாற்றி, தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதிலேயே தொழிற்சங்கங்களின் வெற்றி என்பது தங்கியுள்ளது.