ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாத காரணத்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த இன்னும் சில மாதங்களாகும் என தெரிவிக்கபடுகிறது.

4 ஆண்டு காலமாக இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதா? அல்லது பழைய முறைப்படி நடத்துவதா? என்ற காரணத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபை உறுப்பினர்களில் 70 சதவீதவீதமானோர் தொகுதிவாரியாகவும் , 30 சதவீதமானோர் விகிதாசார முறையிலுமாக கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனினும், ஒரு தொகுதியில் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவரை வேட்பாளர்களாக நிறுத்தும் யோசனைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இதுவரையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் மாவட்டத்துக்கு தலா 2 மேலதிக ஆசனங்கள் வழங்குவது குறித்த யோசனைக்கும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே முடிவு எட்டப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி காலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.