நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ‘தி வயர்’ (The Wire) எனும் தொலைக்காட்சி தொடரில் ஒமர் லிட்டில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் கே.வில்லியம்ஸ்.

மைக்கேல் கே.வில்லியம்ஸ் , அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்லின் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர், தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

54 வயதான மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டு சமையல் அறையில் இருந்த மேஜையில் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

மைக்கேலின் உறவினர்களில் ஒருவர் அவருடன் வெள்ளிக்கிழமை பேசியிருக்கிறார். சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் அவர் செல்லவில்லை. இதையடுத்து அந்த உறவினர் திங்கட்கிழமை மைக்கேலின் வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதேவேளை தனக்கு போதைப்பொருள் பிரச்னை இருந்தமை குறித்து மைக்கேல் வில்லியம்ஸ் ஏற்கெனவே வெளிப்படையாக பேசியிருக்கிறார். மைக்கேலின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று பொலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் வில்லியம்ஸின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ் மரணம் அவருடைய ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.