மாநில முதல்வரைத் தங்கள் காலடியில் வீழ்த்தி ஆட்சி செய்யும் மோடி, அமித் ஷாவின் நடைமுறையை வெறுக்கிறேன்”.!

“எல்லோரும் எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்கிற சித்தாந்தம் உடையவர்கள் ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி வகையினர். அனைவரும் சமம் என்கிற சித்தாந்தம் கொண்டவர்கள் நாங்கள். ஒரு மாநில முதல்வரைத் தங்கள் காலடியில் வீழ்த்தி ஆட்சி செய்யும் மோடி, அமித் ஷாவின் நடைமுறையை வெறுக்கிறேன்” என ராகுல் பேசினார்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேசியதாவது:

“நான் எளிமையாக இந்தத் தேர்தல் எதைப் பற்றியது என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இதில் என்னுடைய சொந்த அனுபவத்தைச் சேர்த்து இங்கு சொல்ல விரும்புகிறேன். அதன் பிறகு உங்களுக்கே புரியும். பாஜக, அதிமுகவை ஏன் எதிர்க்கிறேன், என் முழு வலிமையையும் அதற்காகச் செலவிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியவரும்.

நான் அமேதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது ஒரு இளம் காங்கிரஸ் நிர்வாகி காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்றார். அவர் பாஜகவில் சேர்ந்தவுடன் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கு இணையாக அவரைச் சேர்த்துக்கொண்டார்கள். இந்தத் தலைவர்கள் அமித் ஷாவைச் சந்திக்கும் ஒரு புகைப்படத்தை நான் பார்த்தேன். அவர் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர். அவர் அமித் ஷாவைச் சந்திக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன்.

அந்தப் புகைப்படத்தில் அமித் ஷா சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் முன் கூனிக்குறுகி கை கட்டி நின்றிருந்தார். அமித் ஷாவின் காலைத் தொட்டு கும்பிட்டபடி இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்னொரு தலைவர் முன் கையெடுத்துக் கும்பிட்டு கூனிக்குறுகி நிற்பதையும், காலில் விழுவதையும் ஒரு அவமானகரமான நிகழ்வாகத்தான் நான் பார்த்தேன்.

இந்த ஒரே ஒரு உறவுதான் பாஜகவில் இருக்கும். வேறுவகை நடைமுறையைப் பார்க்க முடியாது. நீங்கள் பாஜகவில் இருந்தாலோ, கூட்டணிக் கட்சியாக இருந்தாலோ நீங்கள் ஒரே ஒரு மரியாதையைத்தான் சந்திப்பீர்கள். அது அவமரியாதை மட்டும்தான். நீங்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கூழை கும்பிடு போட்டுத்தான் அவர்களிடம் நிற்க வேண்டும். அமித் ஷா, மோடி ஆகியோரின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் நடைமுறை.

எங்களுக்கு வேறுவகை சித்தாந்தம், எண்ணம் உள்ளது. எந்த உறவில் ஏற்றத்தாழ்வு உள்ளதோ அது உறவே இல்லை என்று நினைக்கிறோம். எங்கள் பார்வையில் தமிழக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். அதைத்தான் நம்புகிறோம். நாங்கள் விரும்புவது ஒன்றை மட்டும்தான். அன்பு, சகோதரத்துவம் வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. ஒரு சித்தாந்தம், எல்லோரும் எனக்குக் கீழே என்கிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, அமித் ஷாவின் சித்தாந்தம். இன்னொரு சித்தாந்தம் சகோதரத்துவம், பாசம், மரியாதை என்கிறது. அதைத்தான் நாங்கள் நம்புகிறோம்.

என்னுடைய பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு தொன்மையான பண்பாட்டு, பாரம்பரியம் கொண்ட மக்களின் பிரதிநிதியான தலைவர்கள், அமித் ஷா, மோடி உள்ளிட்டோரின் காலில் விழுந்து கிடக்கிறார்களே என்கிற கோபம் எனக்கு வருகிறது. வரலாற்றுப் பாரம்பரியமிக்க தமிழக மக்களின் தலைவர்கள் இவர்கள் இருவர் காலில் வீழ்ந்து கிடப்பதா என்கிற கோபம் வருகிறது. அதற்காகத்தான் நான் இங்கே வந்துள்ளேன்.

நான் என்ன வகையான உறவு முறையை விரும்புகிறேன் என்றால் அது பரஸ்பரம் மரியாதை அளிக்கும் உறவாக இருக்க வேண்டும். எனக்கு என்ன மாதிரியான ஆட்சி முறை வேண்டும் என்றால் தமிழகத்திலிருந்து ஆளுகின்ற தமிழகம்தான் வேண்டும். டெல்லியில் இருந்து ஆளுகின்ற அரசு அல்ல. ஒரு வித்தியாசம் உள்ளது. தமிழகம்தான் இந்தியா என்று சொல்லும்போது இந்தியாவும் தமிழகம்தான் என்று சொல்லவேண்டும்.

இந்தியாவுக்குக் கீழ்பணிந்து தமிழகம் இருக்க வேண்டும் என்றால் அது இந்தியாவே அல்ல. நான் விரும்புவது சக மனிதருக்கு அளிக்கப்படும் மரியாதை. அனைவரின் பாரம்பரியத்தையும் மதிக்கும் மரியாதை. ஒரு மொழிதான் உயர்ந்தது என்பதல்ல இந்தியா. ஒரு பாரம்பரியம்தான் உயர்ந்தது என்பது நான் விரும்பும் இந்தியா அல்ல.

தமிழ் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெங்காளியும் முக்கியம் அதேபோல் அனைத்து மொழிகளும் முக்கியம் என்று மதிக்கும் இந்தியாதான் முக்கியம். பிரதமர், தமிழக முதல்வரைக் கட்டுப்படுத்துவதும், அவரைத் தன் காலின் கீழ் விழ வைத்திருப்பதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது நான் விரும்பும் இந்தியா அல்ல. உ.பி. முதல்வர், அமித் ஷா காலில் விழ கட்டாயப்படுத்தப்படுகிறார்.

அவர் அமித் ஷா காலில் விழ விரும்பவில்லை. அவரே இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவர் காலில் விழுந்ததற்குக் காரணம் அவர் நேர்மையற்றவராக இருந்த காரணம்தான். அதே விஷயம்தான் தமிழகத்திலும் நடந்துள்ளது. ஒரே மாதிரியான சம்பவம்தான். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஒரு மாநில முதல்வரைக் காலில் விழவைத்து நடத்துவது.

தமிழக முதல்வர் அவ்வாறு பணிந்து போவதற்குக் காரணம் அவர் நேர்மையற்றவராக மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டியதே காரணம். எந்த ஒரு மானமுள்ள தமிழனும் அதை விரும்பமாட்டான். அதனால்தான் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தமிழகத்துக்குள் நுழையக்கூடாது என்பதற்காக நான் இங்கு நிற்கிறேன். தமிழகத்தில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. மிகப்பெரிய சவாலைத் தமிழகம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது”.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.