சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகைமண்டலத்துக்கு இடையே இந்தப்பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிகமுக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா?

இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொருநாளும் சராசரியாக 2 லட்சம் தொற்று கண்டறியப்படுகிறது, 4000 பேர் இறந்து போகிறார்கள், தீவிரமான தடுப்பூசித் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.

ஜெய்ஷங்கர், அமெரிக்க உயரதிகாரிகளுடனும், தடுப்பூசித் தயாரிப்பாளர்களையும் சந்திக்கத் திட்டம் வைத்திருக்கிறார், இந்த சந்திப்புகள் இந்தியாவுக்கான தடுப்பூசியைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்புகிறார்.

முன்னதாக, ஜோ பைடன், 8 கோடி தடுப்பூசி டோஸ்களை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருக்கிறார், இதிலிருந்து இயன்ற அளவு தடுப்பூசிகளை இந்தியாவுக்காக பெற்று விட வேண்டும் என்பது ஜெய்ஷங்கரின் நம்பிக்கை.

இந்தியாவுக்கு அது தவிர்க்க முடியாத தேவை, ஏப்ரல் மாத தடுப்பூசி வழங்களின் அளவு மே மாதத்தில் பாதியாகக் குறைந்திருக்கிறது, ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெருந்தொற்றால் இறந்துபோயிருக்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது, அதிகாரப்பூர்வமாக இது 3.15 லட்சம் என்று சொல்லப்பட்டாலும், பெரும்பான்மையான மருத்துவ நிபுணர்கள் இது குறைத்து மதிப்பிடப்பட்டது என்றே கணிக்கிறார்கள்.

இந்தியா, குறுகிய காலத்தில் மிக நீண்ட தொலைவைக் கடந்து வந்திருக்கிறது, தடுப்பூசிகளை உலகிற்கு வழங்கி காப்பாற்றப் போகிற அவதாரம் என்ற நிலையிலிருந்து, உலகிடம் தடுப்பூசிக்கு கெஞ்சும் பரிதாபமான நிலை அது, உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பாளரான இந்தியாவுக்கு, தடுப்பூசிகளைப் பெறுவது அவ்வளவு எளிதானதில்லை.

கவர்ச்சிகரமான, நன்றாகப் பேசத்தெரிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த நிலையைக் கொஞ்சம் கம்பீரமானதாக மாற்ற ராஜதந்திர முயற்சி செய்கிறார். அவர் தத்துவார்த்த அறிவுரைகளை வழங்குகிறார், “நாடுகள் தங்கள் சொந்த நலனைப் பெரிதாகக் கருதாமல் உலக நன்மைக்காக சிந்திக்க வேண்டும்” என்று ஹூவர் நிறுவனத்தின் ஒரு நிகழ்வில் பேசினார்.

நல்லவேளை, அவர் இது இந்தியாவின் தடுப்பூசி தேசியவாதம் என்று சொல்லியிருந்தால் நல்ல வேடிக்கையாக இருந்திருக்கும், ஏனெனில் அவருடைய பிரதமர் வெறுங்கைகளால் படகு ஓட்டிக்கொண்டிருக்கிறார், ஆனால், அது இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக, இந்தியாவில் இருந்து தடுப்பூசி வந்துவிடும் என்று நம்பிய பல நாடுகளையும் நட்டாற்றில் விட்டிருக்கிறது.

தனது குடிமக்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று இந்தியா இப்போது தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது, இது கொடுப்பதைப் போலக் கொடுத்துப் பிடுங்கிக் கொள்கிற நிலை, மேலும், இது ஏழை நாடுகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சீரான தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்வதற்கான “உலகளாவிய கோவாக்ஸ்” திட்டத்தை அச்சுறுத்துகிறது.

சரியான நேரத்தில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யாமல், வாய்ஜாலம் செய்துகொண்டிருந்து, தாமதித்த மோடியின் இந்த செயலால் பல உலக நாடுகள் கவலையடைந்திருக்கிறது, ஆகஸ்ட் 2020 இல், இந்தியா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஏற்கனவே தயாரித்து விட்டது என்று பிரம்மாண்டமாக அறிவித்த மோடி, தனது முதல் தடுப்பூசிக் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தையே ஜனவரி 2021 இன் கடைசியில் தான் துவங்கினார். அதிலும் மிகக்குறைந்த அளவிலான ஒப்பந்தம் அது.

விளைவு, பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவைக் கடுமையாகத் தாக்கத் துவங்கியபோது வெறும் 0.5 % மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார்கள், இன்றைய தேதியில் அது 3.1 % ஆக மாறியிருக்கிறது, உலகின் எந்த ஒரு தலைவரும் தடுப்பூசிகளைப் பற்றி இவ்வளவு வாய்கிழியப் பேசியதில்லை, செய்ததோ ஒன்றுமில்லை. இந்த வாய்ஜாலத்தின் விலையை இந்தியர்கள் மட்டுமே கொடுக்கப்போவதில்லை.

Serum Institute of India, (ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்டரா செனாக்கா கூட்டு நிறுவனம்) 90 % இந்தியர்களின் கோவிட் 19 தடுப்பூசி மருந்தைத் தயாரித்து வழங்குவதாக சொல்லிய நிறுவனம், இந்த ஆண்டில் மட்டும் 200 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்வதாக உறுதியளித்திருந்தது, ஆனால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு இப்போது இந்த ஆண்டு இறுதிவரை எங்களால் தடுப்பூசி வழங்க இயலாது என்கிறது. உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளிடம் இருந்தும் தொடர்ந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா லண்டனுக்குப் பறந்து விட்டார்.

இதன் விளைவுகள், COVAX எனப்படுகிற இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை நம்பியிருந்த 92 நடுத்தர மற்றும் ஏழை நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும், ஒருவேளை அவர்கள் புதிய நிறுவனங்களை நோக்கிப் போனாலும் தடுப்பூசி கையில் கிடைப்பதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும், Serum நிறுவனத்தின் இந்தத் திடீர் முடக்கம், ஜூன் மாத இறுதியில் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை 19 கோடி அளவுக்குக் கொண்டு செல்லும். அதாவது 12 ஆப்ரிக்க நாடுகளின் மக்களில் ஒருவர் கூட முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாள், ஸ்ரீலங்கா போன்றவை மிகப்பெரிய தடுப்பூசித் தட்டுப்பாட்டில் இருக்கிறது, குறிப்பாக நேபாளம், மிகப்பெரிய அளவிலான தொற்றுக்கு ஆளாகி இருக்கிறது, அதன் கையில் தடுப்பூசிகள் இல்லை, ஏப்ரல் 1, 2021 அன்று வெறும் 152 தொற்று எண்ணிக்கையானது இப்போது 8000 அளவுக்கு அங்கே உயர்ந்திருக்கிறது, அதன் மருத்துவ உள்கட்டுமானம் சிதைந்து போயிருக்கிறது, 20 லட்சம் தடுப்பூசிகளை அது Serum Institute இடம் இருந்து வாங்கியிருந்தது, இந்தியாவுக்கான தடுப்பூசி குறித்த ஞானம் மோடிக்கு தாமதமாக உதித்த பிறகு நேபாளத்துக்கான விநியோகத்தை Serum Institute நிறுத்தி விட்டது. இதே நிலைதான் மற்ற நாடுகளுக்கும்.

பற்றாக்குறை நிரம்பி இருக்கும் சூழலில், கொடுக்கப்பட்ட இந்தியாவின் தடுப்பூசிக்கான ஒப்பந்தங்கள் Serum Institute ஐ ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருக்கிறது, மார்ச் இறுதிவரையில் இந்தியா, தனது மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை விட அதிமான அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது, இதைப் தேசிய பெருமையாகத் தம்பட்டம் அடித்தது அரசு. ஆனால், உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைப் பொறுத்தவரை இது கொலைகாரத் துயரம்.

பெருந்தொற்றுக்கு முன்பாகவே Serum Institute ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனம்தான்.

பூனாவாலா, தன்னுடைய சொந்த நிதியைத்தான் இதற்காகப் பயன்படுத்தினார், பன்னாட்டு நன்கொடையாளர்கள், பல்வேறு நாடுகளோடு இணைந்து அவர் இந்த இடர்க்காலத்தை எதிர்கொள்ள முயற்சி செய்தார், இந்திய அரசோ இந்த நிறுவனத்துக்கு விரைந்து நிதி உதவியும் செய்யவில்லை, தடுப்பூசிக்கான ஆர்டர்களையும் வழங்கவில்லை, ஜனவரி 16 அன்று இந்தியாவின் முதல் நிலை தடுப்பூசி வழங்கல் திட்டம் முடிந்திருந்தபோது இந்திய அரசு 1.1 கோடி தடுப்பூசிகளைத்தான் Serum Institute இடம் இருந்து வாங்கியிருந்தது, பாரத் பயோ டெக்கிடம் இருந்து 55 லட்சம்.

பிப்ரவரி இறுதியில் மேலும் 2.1 கோடி தடுப்பூசி ஆர்டர்களை வழங்கினாலும், மேலும் தேவைப்படுகிற அளவுகளைக் குறித்து வாய் திறக்கவில்லை, திடீரென்று மார்ச் மாதத்தில் தொற்று தீவிரமாகப் பரவத் துவங்கியபோது 11 கோடி தடுப்பூசிகளுக்கான ஆர்டரை இந்தியா கொடுத்தது. இதுவும் கூட இந்தியாவின் மக்கள்தொகையான 140 கோடியோடு ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவுதான்.

ஒப்பீட்டளவில், நவம்பர் 2020 வாக்கில், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஏறத்தாழ 70 கோடி தடுப்பூசிக்கான ஆர்டரை முன்னதாகவே வழங்கி இருந்தன, பணக்கார நாடுகள் ஒருபக்கம் தடுப்பூசிகளை வாங்கிக் குவிப்பது குறித்த விமர்சனம் இருக்கிறது, சமநீதியற்ற ஒரு செயல்பாடு இது, ஒட்டுமொத்தத் தயாரிப்பையும் அவர்கள் வாங்கிக் குவித்தார்கள்.

குறிப்பாக கனடா தனக்குத் தேவையானதை விட 5 மடங்கு தடுப்பூசிகளை வாங்கி வைத்துக் கொண்டது, இங்கிலாந்து ஏறத்தாழ 4 மடங்கு தடுப்பூசிகளை வாங்கியது, ஐரோப்பிய யூனியன் 2.7 மடங்கும், அமெரிக்கா 2 மடங்கும் அதிகமாக வாங்கிக் குவித்தன. அமெரிக்க மக்கள் தொகையில் பாதியளவுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முடிந்துவிட்டது, அதே வேளையில் மத்திய ஆப்ரிக்க நாடான Chad தனது குடிமக்களில் ஒருவருக்குக் கூட தடுப்பூசி வழங்கவில்லை.

இந்த தடுப்பூசி அநீதியைத் தடுக்கவே COVAX திட்டம் வடிவமைக்கப்பட்டது, இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான மையமாக Serum Institute இருந்தது. Serum Institute க்கு வழங்கப்பட்ட உரிமம் அவர்கள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையோடுதான் கொடுக்கப்பட்டது, மோடியின் வாய்ஜாலமும், அவரது அரசு தடுப்பூசிகளை விரைந்து வாங்குவதில் காட்டிய மெத்தனப் போக்கும் இன்று பல ஏழை நாடுகளின் குடிமக்களை அவர்களின் உயிருக்கான உத்திரவாதத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தடுப்பூசி அநீதி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, இதற்கும், சாட்சாத் மோடிதான் முழுமையான காரணம்.

ஒன்றிய அரசுகள்தான் கொள்முதல் செய்ய வேண்டும், பெருந்தொற்றுக்கால இலவச தடுப்பூசி போன்ற உலக விதிகளை உடைத்து வணிகமயமாக்கியதும் மோடி அரசுதான், அவர் மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்தார். சந்தையை அவர் திறந்து விட்டார், இன்னும் ஆய்வுகள் முடியாத சில வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்தார், இப்போது அவர்கள் தாங்கள் விரும்பிய விலைக்கு மாநிலங்களுக்கு, மாநகராட்சிகளுக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி விற்பனை செய்யலாம், மத்திய அரசும், மாநில அரசுகளும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும், ஆனால், தனியார் மருத்துவமனைகளில் விலைகொடுத்துத்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், விலையோ நாளொரு வண்ணம் அதிகரிக்கிறது.

இந்தியாதான் உலகிலேயே உயிர் காக்கும் தடுப்பூசிகளை விற்பனைக்கு விட்ட முதல் நாடு, கூடவே வெவ்வேறு விரும்பிய விலைகளில் விற்கவும் அனுமதித்த நாடு. மாநிலங்கள் தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்கப் போராடி வருகின்றன, மேலும் பல நாடுகள் விரக்தியில் போட்டியிடுவதால், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் சந்தையில் தங்கள் ஆட்டத்தைத் துவங்கி இருக்கிறார்கள்.

இந்த அநீதியை மேலும் அதிகமாக்கும் விதமாக இந்தியா 18 முதல் 44 வயது வரையிலான குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்க ஒரு செயலியை அறிமுகம் செய்திருக்கிறது, இந்தியர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன்களை வைத்திருக்கிறார்கள் என்பது போலவும், இந்தியர்களை அனைவரும் தொழில்நுட்பங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பது போலவும் அரசு கற்பனை செய்து கொண்டு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

நிலைமையோ நேர்மாறாக இருக்கிறது, இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் குறித்து எந்த அறிமுகமும் இல்லை. தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கான தனது கடமையைத் திரும்பப் பெறுவதன் மூலம், உலக அளவில் தடுப்பூசி கிடைப்பவர்களுக்கும், கிடைக்காதவர்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா உதவியுள்ளது.

வாய்ஜாலம் காட்டிய விஷயங்களில் பணத்தை முதலீடு செய்யாமல் முதலில் இந்தியர்களின் உயிரைப் பந்தயம் கட்டினார் மோடி, நிலைமை கைமீறி, மிக மோசமாகப் போனபோது இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்ற இயலாத வண்ணம் சீர்குலைத்தார். இந்திய தடுப்பூசி நிறுவனங்களை நம்பியிருந்த எண்ணற்ற பிற நாட்டு மக்களின் உயிர் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

“நாடுகள் தங்கள் சொந்த நலனைப் பெரிதாகக் கருதாமல் உலக நன்மைக்காக சிந்திக்க வேண்டும்” என்கிற போலியான ஜெய்ஷங்கரின் சொற்களுக்குப் பின்னால் எப்படியான உலக நன்மை இருக்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரியக்கூடும்.