விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சிறையிலிருந்து கையடக்கத் தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறைச்சாலைகள் ஆணையாளரும் (நிர்வாகம்), ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மெகசின் சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் உள்ளிட்ட இருவர், ரிஷாட் பதியுதீன் எம்.பி. வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்தை நெருங்கிய வேளையில் அவர் அதனை சிறைக்குள்ளிருந்து வெளியே வீசியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குறித்த கையடக்கத்தொலைபேசி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.