லெபனான் பிரதமரின் பிரத்தியேக வைத்தியரான டொக்டர் இஷாம் யசினின் தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வரும் 2 இலங்கை பெண்களில் ஒருவர், தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான ஆரம்பகட்ட விசாரணைகள் கடந்த 31ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக லெபனானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷானி கல்யானிரத்ன கருணாரத்ன , தெரிவித்தார்.லெபனான் பிரதமரின் பிரத்தியேக வைத்தியரான டொக்டர் இஷாம் யசினின் தந்தையான இப்ரையிம் அலி யசின் என்ற 92 வயதான வயோதிபர் மற்றும் அவரது வீட்டில் பணிப் புரிந்த இலங்கை பணிப் பெண்ணான குருநாகல் பகுதியைச் சேர்ந்த குணவத்தி ஆகியோரை, இரண்டு இலங்கை பணிப் பெண்கள் மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர்.இந்த சம்பவம் 2016ம் ஆண்டு இடம்பெற்றுள்ளதாக லெபனானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவிக்கின்றார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்களான நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகியோர், லெபனானிற்கு பணிப் பெண்ணான சென்ற குணவத்தியுடன் நட்பு ரீதியில் பழகியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டில் வயோதிபர் ஒருவர் மாத்திரம் இருப்பதை அவதானித்த நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகியோர், அவரை கொலை செய்து, அவரது சொத்துக்களை கொள்ளையிட திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, குறித்த இரண்டு பேரும், அந்த வீட்டிற்கு ஒரு நாள் சென்று, இலங்கைப் பெண்ணான குணவத்தியுடன் கலந்துரையாடியுள்ளனர்.லெபனானிற்கு வருகைத் தந்த தமக்கு வேலை இல்லாது போயுள்ளதாகவும், தாம் செய்வதறியாதுள்ளதாகவும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகியோர், குணவத்தி என்ற இலங்கை பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.இவர்களது கஷ்டத்தை உணர்ந்த குணவத்தி, தனது முதலாளியிடம், இந்த விடயம் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

தமது நாட்டைச் சேர்ந்த இருவரும் லெபனானிற்கு வருகைத் தந்து, கஷ்டத்தில் உள்ளதாகவும், அன்றைய தினம் மாத்திரம் குறித்த வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்குமாறும் குணவத்தி, தனது முதலாளியிடம் கோரியுள்ளார்.குணவத்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவரது முதலாளியான இப்ரையிம் அலி யசின், அன்றைய தினம் தனது வீட்டில் தங்க வைக்க அனுமதி வழங்கியுள்ளார்.இந்த நிலையில், குணவத்தி, இலங்கையர்களான நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகியோருக்கு இடியப்பம் உள்ளிட்ட இலங்கை உணவு வகைகளை செய்து, உணவு வழங்கியதுடன், அவர்களை அதே வீட்டில் அன்றைய தினம் தங்க வைத்துள்ளார்.நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகியோர் நித்திரைக்கு செல்வதாக கூறி, தமக்கு வழங்கப்பட்ட அறைக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில், இரவு நேரத்தில் குறித்த இருவரும் முதலில் வயோதிபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.குறித்த வயோதிபர் நித்திரை கொண்ட கட்டிலில் வைத்து, அவரது நெஞ்சில் பல்வேறு தடவைகள் கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளனர்.வயோதிபரை கொலை செய்ததன் பின்னர், அந்த வீட்டில் பணிப் புரிந்த குணவத்தி என்ற பெண்ணையும் அவர்கள் கொலை செய்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தில் பொலித்தீன் பையொன்றை இட்டு, நைலோன் கயிற்றினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, குறித்த வீட்டில் இருந்த பல பொருட்கள் மற்றும் பணத்தை இருவரும் கொள்ளையடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்த நிலையில், மறுதினம் வயோதிபரின் மகனான லெபனான் பிரதமரின் பிரத்தியேக வைத்தியர் டொக்டர் இஷாம் யசின் தந்தையின் வீட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

இதன்போதே, தனது தந்தை மற்றும் பணிப் பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்ததை அவர் அவதானித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக, நிலுஷா மற்றும் லக்ஷிகா ஆகிய இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் லக்ஷிகா என்ற பெண், இலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக லெபனானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷானி கல்யானிரத்ன கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

இந்த விடயத்தை இன்டர்போல் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.இவ்வாறான நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பெண்களுக்கும் மரண தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இவ்வாறு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லெபனானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷானி கல்யானிரத்ன கருணாரத்ன தெரிவிக்கின்றார்.