ஏதேனும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைய கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையம் என்பவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில், நேற்று (14) விமான நிலையத்துக்குக் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சலை அடுத்து விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் உறுதிபடுத்தப்படவில்லை என்றபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் குழுக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐஎஸ்ஐஎஸ், தலிபான் சிந்தனைகளால் தூண்டப்பட்ட குழுக்கள் இலங்கையிலும் செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக ஆராயுமாறு நாட்டிலுள்ள சகல புலனாய்வு பிரிவினருக்கும் பொலிஸ் பிரதானிகளினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.