மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.