ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆக்கிரமித்துவரும் நிலையில், அபாயத்திலிருக்கும் 20,000 ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.

கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marco Mendicino, நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

குறிப்பாக, தாலிபான்களால் குறிவைக்கப்படும் அபாயத்திலுள்ள பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், கனேடிய இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் வரவேற்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முதலான நாடுகள் தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தாலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகிறார்கள்.

ஏற்கனவே அவர்கள் கைப்பற்றிய இடங்களில், பெண்களை பொது இடத்தில் சவுக்கால் அடித்தல், திருடியவர்களை பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லுதல் முதலான அவர்களது முரட்டுத்தனமாக தண்டனைகள் துவங்கிவிட்டதை பல வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

அத்துடன், இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்துச் செல்லவும் தாலிபான்கள் துவங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், பெண்கள் முதலான எளிதில் பாதிப்புக்குள்ளாக்கப்படும் நிலையிலுள்ள சுமார் 20,000 பேரை அகதிகளாக அழைத்துக்கொள்ள கனடா முடிவு செய்துள்ளது.