சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வங்கிகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றில் இலங்கை முதலிடத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிள்ளது என்று தெரிவித்த பிரதமர், நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன், இணையவழியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாள்களில் இலங்கை அதிகாரிகளுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் உறுதியான தீர்வைக் காண்பதற்கு முயற்சிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கைகளுக்கு உட்பட்டு உதவிகளை வழங்க எப்போதும் தயாராக இருக்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது