எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரதமரும் எரிசக்தி அமைச்சரும் முன்வைத்துள்ள உண்மைகள் முரண்பாடானவை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அமைச்சுக்களில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நபர்களுக்கு நடைமுறை அறிவு இல்லை என தெரிவித்தார்.

அமைச்சர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து இன்று முதல் எரிபொருள் வழமை போன்று கிடைக்கும் என தெரிவித்திருந்த நிலையில், எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும் என பிரதமர் நேற்று தெரிவித்திருந்தார்.

புகழ்பெற்ற அரசியல்வாதிக்கும் அனுபவமில்லாத அமைச்சருக்கும் உள்ள தெளிவான வித்தியாசம் இதுதான் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 

அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், நிர்வாகத் திறன்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அத்தகைய அறிக்கைகளின் துல்லியம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.