ஜப்பானின் மலிவுக் கட்டண விமானச் சேவையான Zipair அதன் அடையாளச் சின்னமான Z என்ற எழுத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Z என்பது தற்போது ரஷ்ய – உக்ரேனியப் போருடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. 

உக்ரேனில் செயல்படும் ரஷ்ய தாங்கிகள் இராணுவச் சீருடைகள் ஆகியவற்றில் Z என்ற எழுத்து காணப்படுகிறது. 

தற்போது ரஷ்யாவில் கார்களிலும், உடைகளிலும் அந்த எழுத்துச் சின்னம் பயன்படுத்தப்படுகிறது. உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் சின்னமாக அது பார்க்கப்படுகிறது. 

இதனால் மனமுடைந்து போனது Zipair நிறுவனம் அதன் அடையாளத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அது Z சின்னத்தைக் கொண்டுள்ளது.  இனி அதைப் பயன்படுத்தினால், நாங்கள் போர் ஆதரவாளர்கள் என்று சிலர் நினைப்பார்கள், சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனால் பச்சை, கறுப்பு, வெள்ளை கலந்து கணித முத்திரை போன்ற ஒரு சின்னத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. 

Japan Airlines நிறுவனத்தின் அங்கமான Zipair, டோக்கியோவுக்கும் சிங்கப்பூர், பேங்காக், சோல், ஹோனலுலு, லாஸ் ஏஞ்சலிஸ் ஆகிய நகரங்களுக்கும் இடையிலான சேவைகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.