இறுதி கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை விரைவில் தீர்க்கவும் தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் நீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் தற்போது 2,337 பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நீர் திட்டங்கள் உள்ளன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைகள் மற்றும் நீர்வளச் சபைச் சட்டம், தேசிய பொது நீர் வழங்கல் திணைக்கள சட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பனவற்றின் அவசரத் தேவைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உட்பட அனைத்து நுகர்வோர்களும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏப்ரல் மாதத்திற்குள் 7500 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.