கடந்த வியாழன் அன்று இலங்கைக்கு துரித பயணம் மேற்கொண்ட 4 பேர் கொண்ட இந்திய தூதுக்குழுவின் பேச்சுவார்த்தை விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு அதிக கடன்களை வழங்குவதற்குப் பதிலாக, இந்திய திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது என்று இந்திய தூதுக்குழு சுட்டிக்காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையில் இந்திய நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு துரித பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுக்களின் போது, இந்தியாவின் திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த அழுத்தங் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மன்னார்-பூநகரி காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகத்துடன் சம்பூரில் முன்மொழியப்பட்ட கூட்டு முயற்சி சூரிய மின் உற்பத்தி நிலையம். திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை புனரமைக்கும் கூட்டு திட்டம் ஆகிய திட்டங்களை இந்தியா துரிதமாக மேற்கொள்ள ஆர்வமாக உள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் கடன் உதவி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் இருக்கலாம். ஆனால் அந்த கடன் எண்ணெய்க்காக அல்ல என்று தெரிய வந்துள்ளது.

இந்தியாவும் எண்ணெய் விநியோகத்தில் சிக்கலை எதிர்கொள்கிறது என்று கூறப்பட்டது.

இந்த சந்திப்புக்களின் பின்னர் பிரதமர் விக்கிரமசிங்க இந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, “நாங்கள் எங்கள் இந்திய சகாக்களிடம் இருந்து மேலும் கடன் உதவி கோரியுள்ளோம். ஆனால் இந்தியாவால் கூட இந்த முறையில் தொடர்ந்து எங்களை ஆதரிக்க முடியாது. அவர்களின் உதவிக்குக் கூட எல்லை உண்டு. மறுபுறம், இந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை நாமும் வைத்திருக்க வேண்டும். இவை தொண்டு நன்கொடைகள் அல்ல என்றார்.

எரிபொருளுக்கான கூடுதல் கடன் வரிகள் இல்லாமல், இலங்கை இப்போது இந்திய உதவியின் கீழ் இறுதி இரண்டு ஏற்றுமதிகளைப் பெறுகிறது.